ஆடிக் கிருத்திகை சிறப்புகள்: திருப்புகழ் பாராயணம் செய்தால் தீராத துன்பமும் தீரும்! சைலபதி

பொதுவாக, கிருத்திகை நட்சத்திரம் என்பதே முருகன் வழிபாட்டுக்கு உகந்த நட்சத்திரம் என்பார்கள். அதிலும் தெய்வ வழிபாடுகள் செய்ய உகந்த ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் சிறப்புக்குரியது.

‘ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை’ என்பது ஆன்றோர் வாக்கு. ஆடிக் கார்த்திகை நட்சத்திர நன்னாளில் ஆறுமுகனை வணங்கினால், கர்ம வினைகள் நீங்கும்; செவ்வாய் தோஷம் அகலும்; திருமணத் தடைகள் நீங்கும். சொந்த வீடு, வாகன வசதி, தொழில் அபிவிருத்தி போன்றவை ஸித்திக்கும் என்கின்றனர் அடியார்கள்.

கிருத்திகை என்பது ஆறு நட்சத்திரங்கள் இணைந்த கூட்டத்தின் பெயர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் பிறந்த ஆறு அக்னிகளும் ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் சேர அவற்றைத் வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அதனால் முருகப்பெருமான் கார்த்திகைப் பெண்களைத் தன் தாயினும் மேலாகப் போற்றுவார். கார்த்திகைப் பெண்களே கார்த்திகை நட்சத்திரங்களாயினர். எனவே, கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது.

மேலும் கிருத்திகை நட்சத்திரம் என்பது சூரியபகவானுக்குரிய நட்சத்திரம். சூரியனே ஆரோக்கியத்துக்கு அதிபதி. எனவே, கிருத்திகை நட்சத்திர நாளில் முருக வழிபாடு செய்வதன் மூலம் நீடித்த ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம். பொதுவாகவே, கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் நல்ல அழகோடும் பொலிவோடும் காணப்படுவர். அவர்கள் தங்கள் கிருத்திகை தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் மேலும் அழகும் அறிவும் பெறுவர். அதிலும் குறிப்பாக, ஆடிக்கிருத்திகை அன்று முருகனை வழிபட்டால் அவை மேம்படும்.

வழக்கமாக இந்த நாளில் முருகப்பெருமானின் ஆலயங்கள் களைகட்டும். பால்குடங்களும் காவடிகளும் நிறைந்து காணப்படும். ஆனால், இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை அத்தகைய கொண்டாட்டங்கள் இன்றி அவரவர் வீடுகளில் மேற்கொள்ள வேண்டிய வழிபாடாக மாறியிருக்கிறது.

ஆலயங்களில் வழிபாடுகள் நடைபெற்றாலும் பக்தர்கள் தரிசிக்க முடியவில்லை. எனவே பக்தர்கள் வீட்டிலேயே முருகப்பெருமானை நினைத்து வழிபட வேண்டும். குறிப்பாக முருகப்பெருமானுக்கு உகந்த திருப்புகழ், கந்த சஷ்டிக் கவசம், வேல்மாறல் பாராயணம் ஆகியவற்றைப் படித்து மகிழ்வது மிகவும் நல்லது. திருப்புகழ் பாராயணம் செய்வோருக்குத் தீராத துன்பமும் தீரும்.

முருகப்பெருமான் நம் மனதில் தோன்றி அருளும் வள்ளல். எனவே இந்த நாளில் அவரை நினைத்து வழிபாடு செய்து போற்றுவோம்.

Leave A Reply

Your email address will not be published.