அரசின் முட்டாள்தனமான முடிவுகளாலேயே இலங்கையில் ‘டெல்டா’ கோரத்தாண்டவம்! போட்டுத் தாக்குகின்றார் சம்பிக்க.

“ராஜபக்ச அரசின் முட்டாள்தனமான முடிவுகளாலேயே இலங்கையில் ‘டெல்டா’ கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடுகின்றது. இதற்கு அரசே முழுப் பொறுப்புக் கூற வேண்டும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்தியா, ரஷ்யா மற்றும் உக்ரேனிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அரசு அழைத்து வந்தமையாலேயே இலங்கையில் டெல்டா பரவல் தீவிரமடையப் பிரதான காரணமாகும். எனவே தற்போது இது தொடர்பில் புலனாய்வு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் நான்காவது அலை கட்டுப்பாட்டை மீறி முழு நாடும் பாரதூரமான நிலைமையை அடைந்துள்ளது.

2020ஆம் ஆண்டு ஜனவரியில் கொரோனா பரவல் தொடர்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்தபோது ராஜபக்ச அரசு அதனைக் கேலிக்குள்ளாக்கியது.

இதனைவிடப் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்ததாகக் கூறிய அரசு, நாளாந்தம் 3 ஆயிரம் பேர் உயிரிழந்த போரை நிறைவுக்குக் கொண்டு வந்த எமக்கு இது ஒரு பாரிய பிரச்சினையல்ல என்றும் தெரிவித்தது.

அரசின் இவ்வாறான அசமந்தப்போக்கே நாடு தற்போதுள்ள நிலைமைக்குக் காரணமாகும்.

அரசின் முட்டாள்தனமான முடிவுகளும், வர்த்தக நோக்கமும் , அரசியல் நோக்கமும் இந்தப் பாரதூமான விளைவுகளுக்குக் காரணம் ஆகும். இதற்கு அரசே முழுப் பொறுப்புக் கூற வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.