தமிழகத்தில் 4 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி – மா.சுப்பிரமணியன்

நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கரோனா தொற்றுஇல்லை (நெகட்டிவ்) என்பதற்கான சான்றிதழ் அல்லது 2 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் கடந்த 5-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் இல்லாதவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதற்காக, ரயில், விமான நிலையங்கள், எல்லைப் பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அவருடன், இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “அண்டை மாநிலமான கேரளாவில் தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த 5 நாட்களில் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு ரயில்களில் வந்த பயணிகள் 277 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து ரயில், விமானம், சாலை மார்க்கமாக வரும் அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் 13 நிமிடத்தில் சோதனை முடிவைஅறிந்துகொள்ளும் வகையில் அதிநவீன ஆய்வகக் கருவி அமைக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக செயல்பாட்டில் உள்ளது.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் டெல்லி சென்றபோது, பிரதமரிடம் நேரில் கேட்டுக் கொண்டார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடமும் இக்கோரிக்கை தெரிவிக்கப்பட்டது

தமிழக அரசின் இந்த பெருமுயற்சியின் காரணமாக, மருத்துவக் கல்லூரிகளை மத்திய சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 4 மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்கள் வீதம் 600 மாணவர்களுக்கு இந்த ஆண்டே சேர்க்கை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற 7 கல்லூரிகளிலும் இந்த ஆண்டு மாணவர்சேர்க்கைக்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டிலேயே 2 தவணை தடுப்பூசிகளை அதிக அளவில் செலுத்திய மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. சென்னையில் இதுவரை 33.43 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.” என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.