கிழக்கில் ஒரேநாளில் உச்சம் தொட்ட கொரோனாத் தொற்றால் பேராபத்து இதுவரை 424 பேர் மரணம் என்கிறார் மாகாணப் பணிப்பாளர்.

கிழக்கு மாகாணத்தில் இதுவரை காலமும் கண்டிராத கொரோனாத் தொற்றுக்களின் பதிவு நேற்று (10) இடம்பெற்றுள்ளது.

ஒரேநாளில் உச்சம்தொட்ட 685 தொற்றுக்கள் அன்றைய தினம் ஏற்பட்டுள்ளன. இது பேராபத்துக்கான சமிக்ஞையாகக்கூட எடுக்கலாம் என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நேற்று அம்பாறை சுகாதாரப் பிரிவில் 227 தொற்றாளர்களும், கல்முனை சுகாதாரப் பிராந்தியத்தில் 105 தொற்றாளர்களும், திருகோணமலை மாவட்டத்தில் 163 தொற்றாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 190 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 24 ஆயிரத்து 455 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, 424 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

அம்பாறை பிராந்தியத்தில் 03 டெல்டா நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது சிகிச்சையில் நலமாகவே உள்ளனர் .

கிழக்கு மாகாணத்துக்கெனக் கிடைக்கப்பெற்ற 9 இலட்சம் தடுப்பூசிகளில் இதுவரை 8 இலட்சத்து 18 ஆயிரத்து 827 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவிட்டன. அதாவது 80 வீதமானோருக்கு முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுவிட்டன.

கடந்த சில நாட்களாக நாட்டின் ஏனைய மாகாணங்களில் சடுதியாக அதிகரித்துள்ள கொரோனா நோயாளர்கள் மற்றும் மரணங்களின் அதிகரிப்பு கிழக்கு மாகாணத்திலும் ஏற்பட்டு வருவதைக் காணக்கூடியதாயுள்ளது.

கடந்த வாரங்களில் கிழக்கில் 200 – 250 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன் 2 – 3 மரணங்களும் ஏற்பட்டிருந்தன. ஆனால், தற்போது அத்தொகை மும்மடங்காக மாறி வருகின்றது. இது கிழக்கு மாகாணத்துக்கு அபாய அறிவிப்பாகக் கருத முடியும்.

இதனைக் கருத்தில்கொண்டு மக்கள் அவதானத்துடன் சுகாதார வழிமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும். சமூக இடைவெளிகளைப் பேணுதல், முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சவர்க்காரம் இட்டுக் கழுவுதல் போன்ற விதிகளைப் பின்பற்றி மக்கள் நடந்துகொள்ள வேண்டும்.

மக்கள் பலர் தடுப்பூசியைப் பெற்றுவிட்டோம் என்ற நினைப்பில் சுகாதார நடைமுறைகளில் ஒருவித தளர்வைக் கடைப்பிடிப்பதாகவே பார்க்கின்றோம். எனவே, தயவுசெய்து அனைவரும் தொடர்ச்சியாகச் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.