கிராமத்து மல்லிகை (சிறுகதை) – கோதை 

நீண்ட  புகையிரதப்  பயணங்கள்,  சந்தர்ப்பங்களும் பயணங்களின் காரணங்களும் சுகமானவையாக இருக்கும் பட்சத்தில்  ரம்யமானவை, மற்ற பயணங்களை விட அழகானவை என்பதாக ராதா நினைத்துக்கொண்டாள். புகையிரதப் பயணங்கள் அவளுக்கு எப்போதுமே பிடித்தவையாகவே இருந்திருக்கின்றன.  தோகையோடு மயில்களும் தாவியோடும் மந்திகளும் அதிவேக புகையிரதத்தின் கடுகதிக்கேற்ப விரைவில் மறைந்தோட அவள் கண்கள் மேலும் பலவற்றைத் தேடியலைந்தன.

மயில்களின் வசீகரத்தில் மனதைப் பறிகொடுத்தவளுக்கு மந்திகளின் தாவலும் கூட அந்த அடர்ந்த வனாந்தரத்திற்கும் அதன் சுற்றுப்புறத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருப்பதாகவே தெரிந்தது. எல்லாவற்றிலும் ஒரு அழகிருப்பதாகத் திடமாக நம்பும் அவளுக்கு கடந்து போகும் இயற்கை வனப்புகள் மனதில் குந்தியிருந்த  இருட்டைத் தற்காலிகமாக அடித்து விரட்டிக்கொண்டிருந்தன.

நீண்டும் வளைந்தும் ஓடிய புகையிரதப் பாதை போன்றே அவள் வாழ்வின் கடந்த  காலநினைவுகளும் அவளது கட்டுப்பாட்டில் இல்லாமல் ஓடத்தொடங்கியது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மயில் போல இருந்தாலும் தன்னடக்கம் ததும்பி வழிந்தவளை தன்னுடன் சேர்த்து வாழ்வு முழுக்க நடக்க விரும்பிய அவள் அன்புக்குரியவனும் , அந்த அன்பைப் அவளுக்குப் புரியவைத்த   அந்தக்  கணமும் மனத்திரையில் தாறுமாறாய் ஓடத்தொடங்கின. அப்பழுக்கில்லாத அன்பும் பரிவும் இரு கை ஒசையாய் பலத்ததில் மிகுதியெல்லாம் பலமிழந்து போனது. ஒரு நாள் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த போது தான் அவன் அவளைத் தன் வீட்டுக்கு அழைத்தான்.

“ஏய், வீட்டுக்குப் போகலாம், வா!” திடீரென அவன் கேட்ட போது அவள் திகைத்துப் போனாள்.

” எங்கட வீட்டில சொல்லாமலோ? எனக்குப் பயமாயிருக்கு!” ராதாவின் தயக்கத்துக்கு தயாராக அவன் பதில் விழுந்தது.

” ஏன்,  வீட்டில சொல்லிப் போட்டுத்தான் என்னை வந்து சந்திச்சனீயாக்கும்?”  கிண்டலாகக் கேட்டவனை ராதா பயம் சற்றே நீங்கியவளாய்ப் பார்த்தாள்.

“சரி வாறன், உங்கட அம்மா ஒண்டும் சொல்ல மாட்டாவோ?”

“நான் யோசிச்சுத் தான் முடிவுகள் எடுக்கிறானான் எண்டு அம்மாவுக்கு நல்லாய்த் தெரியும், எடுத்த முடிவுகளை மாத்த மாட்டன் எண்டும் அவவுக்குத் தெரியும்.” திடமாகப் பதில் தந்தான் அவன்.

மயில்களையும் மந்திகளையும் புகையிரதத்தின் ஓட்டத்தில் ரசித்தவளுக்கு சட்டென்று மனதில் ஓர் அடி விழுந்து அவளை நிலை குலையப் பண்ணியது. மயிலாகவும் மந்தியாகவும் பிறந்தது அவைகளின் குற்றமா, அவள் தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள்.  அவரவர் பிறப்பின் தேவைகளும், வாழ்வின் சூட்சுமங்களும் அவற்றின் பாதிப்புகளும் தனித்தன்மைவாய்ந்தவை அன்றோ? வாழ்வின் இயற்கை விழுமியங்களை மனிதம் மாற்றியமைக்கவும்கூடுமோ? கண்களில் கசிந்த  கண்ணீர் புகையிரதத்தின் குலுக்களோடு சிலநிமிடங்களுக்கு ஓய்வு  எடுத்துக்கொண்டது.

நீண்ட பாதையில் ஓடிய பல மணி நேரப்பயணத்தை இலகுவாக்கும் முயற்சியில்  சிற்றுண்டி விற்பவர்கள் முயற்சிப்பது தெரிந்து, அவனும் அவளுக்கு ஏதாவது தேவையா என்பதை கண்களால்க் கேட்டுக்கொண்டான்.  அவளும் எதுவுமே வேண்டாம் என்பதை கண்களாலேயே பதிலாக்கினாள். அந்தக் கேள்வியையும் பதிலையும் தாண்டி வேறெதுவும் பேச       அவன் கண்கள் மறுத்த போது, கண்ணீர் ததும்பிய அவள் இதயம் ஏமாற்றத்தை  உள்வாங்கிக் கொண்டது. வாய்கள் பேசுவதை நிறுத்தி வாரக்கணக்காகியிருந்தது  என்பதைத் திடீரென நினைத்துக் கொண்டாள். கண்கள் மட்டுமே அவ்வப்போது தேவையை பொறுத்து உரையாடிக்கொண்டன.

இப்படி ஒரு சந்தர்ப்பம் எப்போதுமே அவர்களிடையே இருந்ததில்லை. கலகலவென்ற அவள் சிரிப்பும், அவனது கிண்டலும் மாறி மாறி வீடு முழுவதும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். கோபமும் தாபமும் இரவும் பகலுமாக,  வருவதும் போவதுமாயே சாதரணமாகி அவர்கள் ஒன்றாகி விட்டிருந்தனர் . அந்த  அந்நியோன்னியமும் அருகாமையும் கடந்த சில நாட்களாக விலகிப் போவது போன்ற நினைவுகளில் அவள் துவண்டு போயிருந்தாள். இந்த இடைவெளி நிரந்தரமாகத் தம்மிருவர் இடையேயும் தங்கிவிடுமோ என்ற பயம் ஒன்று அவளைக் கவ்விக்கொண்டது. கலகலப்புக்கு மறுபெயரேஅவன் தானோ என எண்ண வைத்தவனின் ஆழ்ந்த அமைதி அவள் இதயத்தைப் பிறாண்டியது.

இவ்வளவு சத்தத்திற்குள்ளும் சாளரத்தை தாண்டி வெளியே  ஊடுருவிய அவனது  வெறித்த பார்வை அவளுக்கு வலியைத் தர அதிலிருந்த மீள முடியாமல் நினைவுகளின் வழியே அவள் அடித்துச் செல்லப்பட்டாள்.

அந்தப் பச்சை பசேலென்ற கிராமத்து வாசனை தள்ளிப்போய் பதின்மூன்று வருடங்கள் பறந்தோடி விட்டது தான்! திண்ணை வீடுகளும், மணல் மேட்டோடு  சேர்ந்தே கட்டப்பட்டிருந்த அம்மன் கோயிலும், ஆம்பல் ததும்பும் குளமும், மாமரத்துச் சோலைகளும், தென்னங்கீற்றிடையே தவள வரும் இதமான காற்றும் மனத்தோடு நின்றுபோய், கனவுகளில் மட்டுமே அவ்வப்போது வந்து போவது வழமையாய்ப் போனது. அவ்வினிமையான  நினைவுகளினூடே கசப்பான மருந்தாக மாதங்கியின் முகமும், வெறுப்பை உமிழும்  அவ்விரு கண்களும் மனத்தை தீயாக சுட்டெரிக்க அவள் சாளரத்தினூடே தெரிந்த இயற்கை அழகை ரசிக்கப் பிரயத்தனப்பட்டுத் தோற்றுப் போனாள்!

 

மாதங்கி! மாதங்கி, அவள் காதல்க் கணவனின் முறைப்பெண்.  முறைப்பெண் என்பது யாரைக் கேட்டு வந்த உறவு என்பது ராதாவுக்கு விடை தெரியாத ஒரு கேள்விதான். கிராமத்துப்பெண்களுக்கேயான பிரத்தியேக அழகைத்தவிர அவளுக்கென்று எதுவுமே குறிப்பாகச் சொல்லப்படாத ஒரு ஓவியம். எதிலுமே அழகைக் கண்டு பிடித்து ரசிப்பது இவளின் பிறவிக்குணமாதலால் மாதங்கியின் அழகும் அவளுக்கு பிடித்தேயிருந்தது.

காதலியாக இருந்த  ராதா  மனைவியாகி முதன்முதலாய் அவன் வீட்டில் காலடி எடுத்து வைத்த போது, தன் மாமியாரின் பின்னேயிருந்து எட்டிப்பார்த்த, கோபமும் வெறுப்பும் உமிழ்ந்த அந்தக் கண்களுக்குச் சொந்தக்காரியை தன் மச்சாள் என அவன் அறிமுகப்படுத்தினான்.

அது மட்டுமல்ல தான் தேர்ந்தெடுத்த துணையை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் மாதங்கிக்கு   இருக்குமா என்பதைப் பற்றி அவன் சிந்தித்ததேயில்லை. இதற்குக் காரணம் மாதங்கியோ அவனோ ஒருவரை ஒருவர் அப்படியான ஒரு கோணத்தில்ப் பார்த்தது கிடையாது, ஆனால் அவன் ராதாவை அறிமுகப்படுத்திய பின் மாதங்கி நடந்து கொண்ட விதம் அவனுக்கு அவள் பார்வை பிழை தானோ என்று எண்ண வைத்தது.  வழமையாக உரிமையுடன் அவன் மாதங்கியுடன் பேசும் போது வரும் கிண்டலும் கேலியும் அன்றும் அவனுக்கு இருந்தது.

‘ஏய் மந்தி, வெளியால வந்து வடிவாய் தான் பாரன்!’ என்றவனின் வார்த்தை கேட்டு மாதங்கியின் முகம் சிறுக்க,  என்ன  சொல்வதென்று தெரியாது தான் திகைத்துப் போனது கண் முன்னே வந்து போனது ராதாவுக்கு.

“மாதங்கியா? மந்தியா?”  என்று தொடர்ந்த,  இவள் எனது மச்சாள் என்ற அவனது உரிமையான சீண்டல், தான் வந்தபின் அங்கே நகைச்சுவையாகவில்லை என்பது  ராதாவுக்கு  நன்றாகவே புரிந்தது.

பார்வையாலேயே தன்னைக் குரோதத்துடன் எதிரியாக்கியவளை எதிர்கொள்ள வழிதேடியவளுக்கு, கிடைத்ததென்னவோ படு தோல்விதான். தனக்கே தனக்கென இருந்த ஒருபொம்மையை திடிரென வந்து தட்டிப்பறித்துச் சென்ற பாவம் அவள் தலையில் விழ, மாதங்கியுடன் அவள் மாமியாரும் சேர்ந்தே கட்சி ஆரம்பித்ததில் ஆடிப்போனாள் ராதா.

” என்ர கைக்குள்ள வைச்சுப் பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை இருக்க எங்கயோயிருந்து  வந்தவளை மருமகளாக்க வேண்டியிருக்கு!” அவன் பக்கத்தில் இல்லாத பொழுதுகளில் மாமியாரின் வார்த்தைகள் சுட்டாலும், அவரின் ஆதங்கத்தை ராதா புரிந்து கொண்டு அமைதியாகினாள்.”

” உங்களுக்குப் படிக்க வசதியெல்லாம் கிடைச்சிருந்திருக்கு. எனக்கு அம்மா, அப்பா இல்லாமற் போனதால படிப்பில எந்தக் கவனமும் செலுத்த முடியேல்லை. நானும் படிச்சிருந்தால் சிலவேளை மச்சானுக்கு என்னையும் பிடிச்சிருந்திருக்கலாம், சரியோ நான் சொல்லுறது?”  மாதங்கியும் தன் முறை மச்சானைப் பற்றி பேச்செடுக்கும் போது, ராதா அவளுக்கு என்ன சொல்வதெனத் தெரியாமல் ஆடிப்போவாள்.

ராதாவுக்கு மட்டுமல்ல அவனுக்குமே தனது  சொந்த வீட்டில் தாக்குப் பிடிக்க முடியாமற் போனது.  ராதாவுக்கு அந்த வீட்டில் எந்தவொரு இடத்தில் நின்றாலும், தன்னை யாரோ உற்றுப் பார்ப்பது போன்ற பிரமை ஏற்பட்டது ஒரு பிரமையும் அல்ல என்பது புரிந்த போது, அவள் வேறு வழியில்லாது மாதங்கியிடமிருந்தும், தன் மாமியாரிடமிருந்தும் விலகிப் போவது இரு பக்கத்துக்குமே நன்மை விளைவிக்கும் என்பது திடமாகிற்று.  மாதங்கியின் எரியும் விழிகள் அவளைக் கொன்று விடும் விஷம் கலந்ததாய் இருந்ததால்த் தான் அவர்கள் இருவருமே அங்கிருந்து வெளியேறியிருந்தார்கள்.

***********************************************************************************************************

புகையிரதத்தின் சீரான ஓட்டம் அவள் இதயத்தையும் அமைதியாக்க முயற்சித்ததில்

அவளும் தன் மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து மெதுவாக வெளியேற்றினாள்.

ஒரு இமைப்பொழுதில் கடந்த அந்த கிராமத்து மணம் மாறத, அந்தச் சின்னஞ்சிறுகோவிலை  அவளுக்குப்  பக்கத்திலிருந்த வயோதிபத்தாய் கையெடுத்துக் கும்பிட்டதை  அவள் ரசித்தாள். அவள் முகத்தில் படர்ந்த இளம் புன்னகைக்குப் பதிலாக அந்த அம்மாவும் புன்னகைக்க மனம் சில நொடிகளுக்கு உலகை மறந்து மீண்டது.

சாமி, பூதம் எல்லாம் கும்பிட்ட காலம் போய் மிக வலுவான ஒரு நம்பிக்கையும் அமைதியும் மனதில்குடிகொண்டதில்  கோவிலின் அமைதியும் அழகும் மட்டுமே அவள் கண்களுக்குத்தெரிந்தது. அவளது நம்பிக்கைக்கும் மூலஸ்தானத்தில்  நாற்காலி போட்டு உட்கார்ந்திருப்பதாகச் சொல்லப்படும் அந்த சாமிக்கும் நிறையவே இறுக்கமான தொடர்புண்டு என்பதையும் நினைத்துக் கொண்டாள். அவரை அவர் பாட்டுக்கு  விட்டுவிட்டு  சலனமற்ற மனதோடு வாழ்வைக் கொண்டு செல்வதில் அவரது ஆசிகளும் அவளுக்கு சேர்ந்தேயிருக்குமோ என அவள் எண்ணிப்பார்த்து, புன்னகைத்த நேரங்களும் உண்டு.

*************************************************************************************************************

இதோ மீண்டும் அந்தக்கிராமத்து வசந்தம். சிறிய மாற்றங்களுடன் காட்சி தரும் புகையிரதத் தரிப்பிடத்தில் கால் வைத்த போது, அவள் துணிச்சலை எல்லாம் மீறி அவள்  மனதில் அவளையறியாது தோன்றிய பயம் முதுகுத்தண்டைச் சில்லிடப்பண்ணியது. மாதங்கியை அவள் இறுதி நாட்களில் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தாலும், ராதாவுக்கு மனதில் தோன்றிய எண்ணக்கலவைகள் மிகவும் சோர்வைத் தந்தன.

 

பன்னிரண்டு வருடங்களின் பின்னர் கிராமத்து வாசனையை உணரப் போகிறார்கள்.  அந்த மகிழ்வையும் தாண்டிய ஒரு வகை பயம் கலந்த உணர்வு அவளுக்குள் உலா வந்தது.  இருந்த போதும் மாதங்கியைப் படிக்க வைத்து, அவளுக்கென ஒரு தன்னம்பிக்கையைத் தூண்டி விட ராதாவும் தன்னால் முடிந்தவரை முயற்சித்திருந்தாள்.  எதுவுமே நடக்கவில்லை, மாதங்கி அவர்களிடமிருந்து எந்த உதவியையும் எடுக்க மறுத்து விட்டாள்.

மாதங்கி! இறுதி வரை திருமணமே வேண்டாமென அடம் பிடித்து வைராக்கியமாக இருந்தவள். தன் முறை மச்சானும் அவன் காதல் மனைவியும்   தமது வீட்டிலிருந்து பல நூறு மைல்களுக்கப்பால் தனிக்குடித்தனம் போக,  தான் மட்டும் இப்படியே இருந்து என்ன செய்வதென திகைத்துப் போய் விட்டாள்.    மாமியாரும் நோய் வாய்ப்பட்டு இறந்து போன போது, இறுதிக்கிரியைகளை நிறைவேற்ற   என  வந்து போன ராதாவையும் தன் மைத்துனனையும் அவள் ஏறிட்டும் பார்க்கவில்லை.

காலங்கள் ஓடிய போது, திடீரெனத் தாக்கிய புற்றுநோயைப் பற்றியும் மாதங்கி எவருக்குமே வாய் திறக்கவில்லை, அத்தனை ஏமாற்றமும், மனதில் விழுந்த தோல்வியும், தன் மீதே காரணமின்றி  ஏற்பட்ட அளவு கடந்த கோபமும் அவளுக்குள் ஒரு வைராக்கியத்தை விதைத்து விட்டிருந்தது.

வைத்தியர்களால் கைவிடப்பட்டு, போகவும் முடியாமல் இருக்கவும் தெரியாமல்திணறி, வாழ்வின் இறுதி நிமிடங்களில் அவள் இருந்த போது தான், தற்செயலாக அவர்கள் கிராமத்தில் இருந்து வந்த ஒரு உறவினரை இவர்கள் சந்திக்க நேர்ந்தது. அதிர்ச்சியோடும் துயரோடும்   மாதங்கிக்கு மரியாதை – அஞ்சலி செலுத்த  புறப்பட்டவனின் கைகளைப் பிடித்து தானும் வருவதாகச் சொன்ன போது அவன் அதிர்ந்ததென்னவோ போலியல்ல.

**********************************************************************************************************

கிராமத்துப் பெண்கள் எல்லாம் எழுந்து வழிவிட, தான் முதல் போகிறேன் என்று  பரிபாசை பேசியவளை ஆச்சரியம் தாங்காமல் பார்த்தவனை, பின்னே தள்ளி அறையின் உள்ளே நுழைந்தவளுக்கு மரணப்படுக்கையிலிருந்த அசையும் எலும்புக்கூட்டின் கண்கள் குதறி எறிந்தன.

இறுதி நொடியிற் கூட இவ்வளவு உணர்வுகள் தீயாகக் கொதித்தெழும்புமா ? அதே கண்கள்!

அவள் நீட்டிய கைகளை வேண்டாவெறுப்புடன்  மாதங்கி பற்றிக் கொண்டாள்.

ராதாவின் அன்பு தோய்ந்த குரலின் ஆதங்கத்தில்  அவள் சற்றே அரண்டு போன தோரணை தெரிந்தது.

“எனக்குத்தான் குடுத்து வைக்கேல்ல, நீ சந்தோசமாய் இருக்கிறாய் தானே?“ மாதங்கியின் குரல் எங்கோ தொலை தூரத்திலிருந்து கேட்பது போலவே இருந்தது.

இன்னும்  அக்கண்களில் மின்னிய குரோதத்தில் எதுவித மாற்றமும் இல்லவே இல்லை! அவள் பேசத்தொடங்கினாள்.

“இல்லை மாதங்கி, என்னை ஏதோ ஆரம்பதில் விரும்பியிருந்தாலும் அவர் எண்ணம் சிந்தனை எல்லாம் நீயும் இம்மண்ணும் தான் என்று நான் நல்லாயே விளங்கிக் கொண்டன்.  ஏதோ வாழ்க்கை ஓடுது, நான் சிரிக்கிறதும் கதைக்கிறதும் நடிப்பு மட்டுமே!”

மாதங்கியின் கண்களில் அந்த ஒரு வினாடியில் பளீரிட்ட அமானுஷமான மின்னலின் பிரகாசத்தில், ராதா உறைந்து போனாள்.

“உண்மையாய்த் தான் சொல்லுறியா ராதா?” மாதங்கியின் குரலில்த் தெரிந்தது ஆதங்கமா, மகிழ்ச்சியா, கவலையோடு சேர்ந்த மகிழ்ச்சியா என்று அவளுக்கு இனம் காணத் தோன்றவில்லை.

ராதாவின்  கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர் மாதங்கியின் எலும்பும் தோலுமாய் இருந்த கைகளில்ப்பட்டுத் தெறிக்க, ராதா    அவர்கள் குல தெய்வமான கிராமத்து அம்மனின் படத்தின் முன்னே மடங்கியிருந்து நான் சொல்வதெல்லாம் சத்தியம் என தன் தலையில் அடித்துக்கொண்டாள்.

“மாதங்கி உனக்கே தெரியும் எங்களுக்கு குழந்தைகள் கூடப் பிறக்கேல்லை.  எங்களுக்குள்ள எந்த அன்னியோன்யமும் கிடையாது. இந்த வீட்டில இருந்து எப்ப வெளிக்கிட்டமோ, அண்டைக்கே எங்கட சந்தோஷமும் இந்த வீட்டோடயே விடுபட்டுப் போச்சு!” ராதாவின் வார்த்தைகளில் தெரிந்த துயரத்தில் மாதங்கியின் கண்களிலும் நீர் துளிர்த்தது.

மாதங்கியின் சீரற்ற மூச்சு சிரமத்துடன் வெளியேற, அறைக்கு வெளியே கதவோரமாக நின்றவனின் காதுகளில் இவையெல்லாம் தாமாகவே விழுந்து கொண்டிருந்தது. இவற்றையெல்லாம்  கேட்டுக்கொண்டிருந்தவன் தன் காதுகளை நம்ப மறுத்து,  அறையின் உள்ளே நுழைந்தான்.

அதே வேளையில் இவளின் கைகளைப் பிடித்திருந்த மாதங்கியின் கண்களிலிருந்த குரோதம் அனைத்தும்அழிந்து, ஒரு குழந்தையின் அப்பழுக்கற்ற  சந்தோசத்துடன் அவள் முகம் மின்னியதை அவர்கள் இருவருமே காணத் தவறவில்லை. அவள் உடலும் உயிரும் ஒன்றையொன்று பிரிய மறுத்து பல வாரங்களாக இழுபட்டுப் போனதையும் அவர்கள்அறிவார்கள். இப்போது,இந்தக்கணத்தில் துடித்த அவள் எலும்புக்கூடும் எது வித ஆரவாரமுமன்றி நீண்ட துயிலில் அமைதியாகியது. இதற்காகவே காத்திருந்தது போல வெளியே குந்தியிருந்த பெண்கள் ஒப்பாரி வைத்து அழத் தொடங்கினார்கள்.

– கோதை

Leave A Reply

Your email address will not be published.