இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் அபாரமாக விளையாட இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்திருந்தது.

ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் 127 ரன்களுடனும், ரஹானே 1 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல். ராகுல் 129 ரன்னிலும், ரஹானே 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

6-வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியதால் இந்தியாவின் ஸ்கோர் 300 ரன்னைத் தாண்டியது.

ரிஷப் பண்ட் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இஷாந்த் சர்மா 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். பும்ரா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.

ஜடேஜா 40 ரன்னில் வெளியேற இந்தியா 126.1 ஓவரில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டும், ஆலி ராபின்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரொரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி ஆகியோர் களமிறங்கினர்.

சிப்லி 11 ரன்கள் எடுத்த நிலையில், சிராஜிடம் அவுட்டானார். அடுத்த பந்தில் ஹசீப் ஹமீது டக் அவுட்டனார்.

அடுத்து இறங்கிய கேப்டன் ஜோ ரூட் பர்ன்சுடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 85 ரன்கள் சேர்த்தது.

அரை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ரோரி பர்ன்ஸ் 49 ரன்னில் ஷமியிடம் வீழ்ந்தார்.

இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 48 ரன்னும், பேர்ஸ்டோவ் 6 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.