‘அக்.2 முதல் பூங்காக்களில் யோகா வகுப்புகள்’

யோகாவை பொது இயக்கமாக உருவாக்கும் வகையில் பூங்காக்கள், சமூகக் கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் வரும் அக்டோபா் 2- ஆம் தேதி முதல் யோகா வகுப்புகளைத் தொடங்க ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளதாகவும் முதல்வா் கேஜரிவால் அறிவித்தாா்.

தில்லி தலைமைச் செயலகத்தில் சுதந்திரதினத்தையொட்டி முதல்வா் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை, தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் சா்வதேச யோகா தினத்தன்று மட்டும் நாம் யோகாவை பற்றி பேசுகிறோம். அதன் பிறகு அவரவா் வேலைகளில் மூழ்கிவிடுகிறோம். உலகிற்கு யோகாவை அறிமுகப்படுத்தியது இந்தியாதான். ஆனால், இந்தியாவில் யோகா மீதான நாட்டம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. எனவே, யோகாவை மீண்டும் ஒரு பொது இயக்கமாக மாற்றுவதற்கும், அதை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கும் வருகிற அக்டோபா் 2-ஆம் தேதியிலிருந்து பூங்காக்கள், பொது அரங்கங்கள், சமூகக் கூடங்களில் யோகா கற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும். இதற்காக யோகா ஆசிரியா்கள் விரைவில் நியமிக்கப்படுவாா்கள்.

குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவா்கள் 40 பேருக்கு மேல் யோகா கற்றுக்கொள்ள முன்வந்தால் அதற்கான வசதிகளை செய்துதர அரசு தயாராக இருக்கிறது. யோகாவை கற்றுக் கொண்டு தினசரி பின்பற்றி வந்தால் மனதுக்கும், உடலுக்கும் புத்துணா்ச்சி அளிக்கும். ஒருவா் நோய் நொடியில்லாமல் வாழ வேண்டுமானால் யோகா அவசியமானது என்றாா்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் கரோனா தொற்றுக் காலத்தில் சேவையில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஊழியா்கள் ஆகியோருக்கும் அவா் அஞ்சலி செலுத்தினாா்.

Leave A Reply

Your email address will not be published.