கொழும்பு இந்திய உயர் ஸ்தானிகராலயம் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் கொவிட்-19 சுகாதார நெறிமுறைகளை .பின்பற்றியவாறு 2021 ஆகஸ்ட் 15ஆம் திகதி இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது.

75 வருடங்களாக இடம்பெற்ற முன்னேற்றகரமான பயணம் மற்றும் சுயசார்பு இந்தியா ஆகியவற்றினை குறிக்கும் முகமாக 2021 மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்வருடத்தில் நடைபெறும் கொண்டாட்டங்கள் அமைகின்றன.

இந்திய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் பிரதான நிகழ்வு நடைபெற்றிருந்தது. தேசியக் கொடியை ஏற்றி வைத்த உயர் ஸ்தானிகர் அணிவகுப்பு மரியாதையும் பார்வையிட்டார்.

அத்துடன் இந்திய ஜனாதிபதி அவர்களின் சுதந்திர தின செய்தியின் முக்கிய குறிப்புகளும் இச்சந்தர்ப்பத்தில் உயர் ஸ்தானிகரால் வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன் இலங்கையிலுள்ள இந்திய சமூகத்தினரும் இலங்கையிலுள்ள இந்தியாவின் நண்பர்களும் மெய்நிகர் மார்க்கங்கள் ஊடாக இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன், இன்றைய தினம் இந்திய இலங்கை மக்களின் நல்வாழ்வுக்காக பரம தம்ம சைத்திய பிரிவேனாவில் விசேட வழிபாடான ஆசீர்வாத பூஜை ஒன்றும் நடைபெற்றிருந்தது. இப்பிரிவேனாவில் உள்ள இந்திய மதகுருமார் உத்வேகத்துடன் சுதந்திர தினத்தை கொண்டாடியிருந்தனர். சுதந்திர தினத்தை குறிக்கும் முகமாக ஏனைய பல கலாசார நிகழ்வுகளும் நிகழ்நிலை மார்க்கங்கள் ஊடாக ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருந்தன.

இந்திய புலம்பெயர் குழுவினரின் அமைப்பான கொழும்புவாழ் வெளிநாட்டவர் கலாசார அமைப்பினரின் ஆற்றுகைகள், அருஶ்ரீ கலையகத்துடன் இணைந்து சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஏற்பாடு செய்த பல்வேறு நடனங்களின் தொகுப்பான பவள நாட்டிய மாலா என்ற நடன நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டிருந்தன.

அத்துடன் இலங்கை பரத நாட்டியக் கலைஞர்கள் பூகோள அமைப்பினால் ஒழுங்கமைக்கப்பட்ட ‘டயமன்ட் பிரிட்ஜ்’ என்ற தனித்துவம்மிக்க நிகழ்ச்சியும் நிகழ்நிலை ஊடாக ஒளிபரப்பப்பட்டது. பிரபலமான கலைஞர்களின் வயலின் இசைக்கச்சேரிகள், பல்வெறு இந்திய நடன வடிவங்களிலான நடன ஆற்றுகைகளையும் இந்த நிகழ்வு உள்ளடக்கியிருந்தது.

ஆடை அலங்கார அணிநடை, உணவுத் திருவிழா மற்றும் இந்திய தேசபக்தி பாடல்கள் இசைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் சமூக ஊடகங்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுகளுக்கு உணர்வுபூர்வமான பேராதரவு கிடைக்கப் பெற்றிருந்ததுடன் இலங்கைத்தீவு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர்.

75வது சுதந்திர தினத்தை குறிக்கும் முகமாக கண்டியிலுள்ள துணை உயர் ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணத்திலுள்ள கொன்சுலேட் ஜெனரல் அலுவலகம் மற்றும் அம்பாந்தோட்டையில் உள்ள கொன்சுலேட் ஜெனரல் அலுவலகம் ஆகியவற்றிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு காலி கோட்டை, யாழ் கலாசார நிலையம், இந்திய இல்லம், தாஜ் சமுத்ரா ஆகியவையும் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, ஆகிய இடங்களிலுள்ள இந்திய இராஜதந்திர அலுவலகங்களும் இந்திய தேசியக்கொடியின் வர்ணங்களைப் பிரதிபலித்து அலங்கரிக்கப்பட்டிருந்தன. இம்முக்கிய ஆண்டினை குறிக்கும் முகமாக ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் 2022 ஆகஸ்ட் 15ஆம் திகதிவரை இலங்கை முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.