UAE தூதரகத்தை பாவித்து திருவனந்தபுரத்திலுள்ள விமான நிலையம் ஊடாக தங்க கடத்தல்

கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள UAE தூதரக பார்சல் வழியாக விமானத்தில் தங்கம் கடத்திய வழக்கு கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து திருவனந்தபுரத்திலுள்ள UAE தூதரகத்துக்குச் செல்லும் பார்சல்களை விமான நிலையத்தில் சோதனை செய்வது இல்லை.

இதைப் பயன்படுத்தி திருவனந்தபுரம் UAE தூதரகத்தின் முன்னாள் ஊழியர்களான ஸரித் மற்றும் ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் பலமுறை தங்கம் கடத்தியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, ஜூலை மாதம் உணவுப் பொருள்கள் என்ற பெயரில் UAE தூதரகத்துக்கு பார்சலில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

அந்த பார்சலை பெற்றுக்கொள்ள UAE தூதரகக் கடிதத்துடன் விமான நிலையத்துக்குச் சென்ற UAE தூதரக முன்னாள் ஊழியர் ஸரித் குமார் கைதுசெய்யப்பட்டார். மேலும் முக்கியக் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தூதரக அதிகாரியைத் தவிர்த்து வேறு யாராவது கடத்துவதில் ஈடுபட்டார்களா என சுங்கத்துறை அதிகாரிகள் ஸ்வப்னாவிடம் கேட்டதற்கு முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனும், முதலமைச்சர் பினராயி விஜயனும் டாலர் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக அவர் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் பினராயி விஜயன் பெயரைப் பயன்படுத்தி ஒரு பாக்கெட் கைமாறியதாகவும், அந்த பாக்கெட்டில் டாலர் இருந்ததாகவும் ஸ்வப்னா தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறாராம். ஆனால் ஸ்வப்னா, ஸரித் ஆகியோர் வாக்குமூலத்திலுள்ள தகவல்களை உறுதிப்படுத்த இயலவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால்தான் இது குறித்து முதல்வரிடம் விசாரணை நடத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.