மூத்த முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் கொரோனாத் தொற்றால் மரணம்!

மூத்த முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் முபீதா உஸ்மான் (வயது 74) கொரோனாத் தொற்றால் காலமானார்.

திடீரெனெ நோய் வாய்ப்பட்ட அவர், சாய்ந்தமருது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

அன்டிஜன் பரிசோதனையின்போது அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது எனக் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும் சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட முபீதா உஸ்மான், 55 வருடங்களுக்கு மேலாக கலை, இலக்கிய, ஊடகத்துறை மற்றும் சமூகப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்துள்ளார்.

இலங்கையில் மூத்த முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள அவர், தினபதி, சிந்தாமனி பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருப்பதுடன், அரச தகவல் திணைக்களத்தில் பிரசார உத்தியோகத்தராகவும் பத்திரிகை தொடர்பு உத்தியோகத்தராகவும் பல வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

கலை, இலக்கிய மற்றும் ஊடகத்துறை பணிகளுக்காக 2008 ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாபூஷணம் விருதையும், ஊடகத்துறை சேவைக்காக 2013 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண கல்வி, கலாசார, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஊடக வித்தகர் எனும் முதலமைச்சர் விருதையும் அவர் பெற்றுள்ளார்.

அத்துடன், சமூக சேவைகளை மையப்படுத்தி, 2012 ஆம் ஆண்டு சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவின் சிறந்த முதல் பெண்ணாகவும், அம்பாறை மாவட்ட ரீதியில் இரண்டாம் நிலையிலும் முபீதா உஸ்மான் தெரிவு செய்யப்பட்டு, மாவட்ட செயலாளரால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கலை, இலக்கிய, ஊடகத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தா ல் கலைஞர் சுவதம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஐ.ரி.என். மற்றும் எம்.ரி.வி. தொலைக்காட்சி நிறுவனங்களால் ஆளுமைப் பெண் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தனது குடும்ப சுமைக்கு மத்தியிலும் சமூகத்தில் குடும்பப் பெண்கள் எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் இதரப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் பெண் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளிலும் கூடிய கவனம் செலுத்தி, அவர்களை முன்னிலைக்கு கொண்டு வருவதில் முபீதா உஸ்மான் அயராது உழைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.