எங்கு சென்றாலும் தாய்மொழியில் பேச வேண்டும் என்பதையே வலியுறுத்திய வெங்கையா நாயுடு

நாம் எப்போதும் தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நாம் எப்போதும் தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதனால் நாடாளுமன்ற கூட்டத்தில் தாய்மொழியில் பேச நான் அனுமதிக்கிறேன்.

மத்திய அரசு தற்போது பொறியியல் கல்லூரிகளிலும் தாய்மொழி வழி கல்வியை அறிமுகம் செய்துள்ளது. இது நல்ல விஷயம். இதனால் தாய்மொழி வளரும். நான் எங்கு சென்றாலும் தாய்மொழியில் பேச வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறேன்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சில எம்.பி.க்கள் கலாட்டா செய்து சபையை நடக்கவிடாமல் செய்தனர். அது மட்டுமின்றி மத்திய அமைச்சர்கள் கைகளில் வைத்திருந்த ஆவணங்களை பறித்து கிழித்து எறிந்தனர்.

சபை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினர். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சில உறுப்பினர்கள் தரம் தாழ்ந்து செயல்பட்டனர். அதனால் மிக வேதனை அடைந்தேன். அவ்வாறு ஒழுங்கீனமாக நடந்து கொண்ட உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்.

மேகதாது, காவிரி பிரச்சினை உள்பட எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் உள்ளன. அதுகுறித்து நாடாளுமன்ற அவைகளில் பேச வேண்டும். அதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும்.” என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.