கொரோனா வைரஸ் தாக்கிய ஒருவரிடமிருந்து, மற்றவர்களுக்கு வைரஸ் பரவும் ஆபத்து எப்போது?

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்டது. இதன் உருமாறிய தோற்றங்கள் இன்னும் அதிகமாக பரவுகிற தன்மையைக் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று, ஒருவரை தாக்கிய பிறகு அவர் மூலம் எப்போது மற்றவர்களுக்கு அதிகளவில் பரவுகிறது என்பது தொடர்பாக சீனாவில் ஒரு ஆய்வு நடந்துள்ளது. இதன் முடிவுகள் ‘ஜாமா இன்டர்னல் மெடிசின்’ பத்திரிகையில் வெளியாகி உள்ளன.

இந்த ஆய்வின் போது ஆராய்ச்சியாளர்கள் சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு வரையில். கொரோனா பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 9 ஆயிரம் பேரை கண்டறிந்து ஆய்வு நடத்தினர்.

நெருங்கிய தொடர்பு என்ற வகையில், ஒரே வீட்டில் வசிப்பவர்கள், ஒன்றாக சாப்பிடுபவர்கள், ஒன்றாக வேலை செய்கிறவர்கள், வாகனத்தில் ஒன்றாக பயணிப்பவர்கள் என ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழக பொது சுகாதார கல்லூரியைச் சேர்ந்த யாங் கே உள்ளிட்டவர்கள், கொரோனா பாதித்தவர்களை 90 நாட்கள் நெருக்கமாக கண்காணித்து வந்தனர். இவர்களை கண்காணித்தபோது, 89 சதவீதத்தினர் மிகக்குறைவான, மிதமான பாதிப்புகளை கொண்டிருந்தது தெரிய வந்தது. 11 சதவீதத்தினர் அறிகுறியற்றவர்கள். ஒருவர் கூட தீவிரமாக பாதிக்கப்படவில்லை.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா தொற்றுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது என்பது உறுதியானது. கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு அறிகுறிகள் தெரியத்தொடங்குவதற்கு முந்தைய 2 நாட்களும், அறிகுறி தெரிந்த பின்னர் 3 நாட்களும், அவர்களால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்பு அதிகமாக உள்ளது என தெரிய வந்தது.

கொரோனாவின் லேசான அல்லது மிதமான பாதிப்புக்குள்ளானவர்களுடன் ஒப்பிடுகையில், அறிகுறியற்றவர்கள் நெருங்கிய தொடர்பில் உள்ள மற்றவர்களுக்கு கொரோனாவை பரப்புவதற்கான வாய்ப்பு குறைவு.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.