ஜோ ரூட் சதம் இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 423/8.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து பந்துவீச்சில் சிக்கிய இந்திய அணியால் அதிலிருந்து மீள முடியவில்லை. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேற சீட்டுக்கட்டு போல் சரிந்தது. இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 40.4 ஓவரில் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டான் 3 விக்கெட்டும் ராபின்சன், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதன்பின், இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்திய பந்து வீச்சாளர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இங்கிலாந்து 135 ரன் எடுத்த நிலையில் ரோரி பர்ன்ஸ் 61 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ஹசீப் ஹமீத் 68 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய தாவித் மலான், ஜோ ரூட்டுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 139 ரன்கள் சேர்த்தது. தாவித் மலான் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஜோ ரூட் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 121 ரன்னில் அவுட்டானார்.

பேர்ஸ்டோவ் 29 ரன், ஜோஸ் பட்லர் 7 ரன், மொயின் அலி 8 ரன், சாம் கர்ரன் 15 ரன் எடுத்தனர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா சார்பில் முகமது ஷமி 3 விக்கெட், சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட், பும்ரா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.