அதிகரிக்கும் தொற்றாளர்கள் : மக்களே பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் : இராணுவத் தளபதி

“இலங்கையில் நாளாந்தம் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. எனவே, மக்கள் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.”

இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தொடர் ‘ஊரடங்கு’ மூலம் அல்லது ‘லொக்டவுண்’ ஊடாகக் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்று மக்கள் எண்ணக்கூடாது.

ஒவ்வொருவரும் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்துப் பொறுப்புணர்வுடன் செயற்பட்டால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்.

அதேவேளை, தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ள மக்கள் அனைவரும் முன்வர வேண்டும். எக்காரணம் கொண்டும் தடுப்பூசிகளைப் பெறுவதில் மக்கள் தயக்கம் காட்டக்கூடாது.

தடுப்பூசிகள்தான் எமக்குப் பாதுகாப்புக் கவசமாக இருக்கின்றது. தடுப்பூசிகளைப் பெற்றவர்களும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி சமூகத்தில் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும்.

இலங்கையில் நேற்று 4 ஆயிரத்து 602 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.

நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 12 ஆயிரத்து 370 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.