தொற்று நோய் குறித்து புரிந்து செயற்படுங்கள் ; ஒத்துழைப்பின்றி ஒழிக்கமுடியாது.

முல்லைத்தீவு மாவட்டத்தினை கொரோனா நோய் அச்சுறுத்திக்கொண்டிருக்கின்ற நிலையில் மக்களின் ஒத்துளைப்பு இல்லாமல் இதனை நாங்கள் ஒழிக்கமுடியாது இதனை புரிந்து செயற்படுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொவிட் 19 நிலமைகள் மற்றும் இடர்கால கொடுப்பணவு வழங்கல் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவிக்கையில்:
முல்லைத்தீவு மாவட்டத்தில் 578 பேர் கொரோனா தொற்றினால் தற்போது இனம் காணப்பட்டுள்ளார்கள்.
இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் தற்போது வரை 15 மரணங்கள் இடம்பெற்றுள்ளது. 784 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

தொழில் பாதிக்கப்பட்டவர்களுக்கான 2000 ரூபா கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு 8553 குடும்பங்கள் தகுதியாகியுள்ளார்கள்.
மாவட்டத்திற்கு கிடைத்த 5 மில்லியன் ரூபா நிதியினை 2500 குடும்பங்களுக்கு வழங்கியுள்ளோம்.
12.1 மில்லியன் மேலதிக நிதி கோரியுள்ளோம். நிதி கிடைத்தவுடன் அது வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இருக்கின்ற வேளையிலும் மக்கள் இன்னும் கவனயீனமாக அன்றாட வேலைக்கு செல்வதாக கூறி தேவையில்லாத விடையங்களை மேற்கொள்வதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பொலீஸ் மற்றும் இராணுவத்திற்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.
இந்த சட்டத்தினை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வேண்டப்பட்டுள்ளது.

மக்களை வினயமாக கேட்பது என்னவென்றால் முல்லைத்தீவு மாவட்டத்திலும் தொடர்ச்சியாக கொரோனா தொற்று பரவிக்கொண்டிருக்கின்றது. எமது மாவட்டத்திலும் இந் நோய் அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றது.
மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இதனை நாங்கள் ஒழிக்கமுடியாது. எனவே நீங்களாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

மருத்துவமனையில் இடம் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் உங்களது குடும்ப உறுப்பினர்கள் தொற்றுக்கு உள்ளாகும் போது நீங்கள் எவ்வாறு நடந்து கொள்வீர்களோ அதேபோல் ஒவ்வொருவரும் மனதில் நினைத்து, உங்கள் செயற்பாட்டினை அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டலுக்கு அமைய செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.