ஐந்து தசாப்த மக்களின் இதயங்களை கவர்ந்தவர் சுனில் : பிரதமர் இரங்கல்

ஐந்து தசாப்த காலங்களாக இலங்கை மக்களின் இதயங்களை வென்ற ஜிப்சீஸ் இசைக்குழுவின் தலைவர் சுனில் பெரேராவின் மறைவு குறித்த செய்தி அறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன்.

சுனில் பெரேராவின் தலைமையில் 1968ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜிப்சீஸ் இசைக்குழு 1970களில் சிறந்த முன்னேற்றத்தை கண்டிருந்தது. குடும்பத்தின் ஐந்து சகோதரர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஜிப்சீஸ் இசைக்குழுவின் ஆரம்ப காலத்தில் மேற்கத்தேய பிரபல பாடல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இலங்கையில் குழு இசையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சுனில் பெரேரா உள்ளிட்ட ஜிப்சீஸ் குழுவினர் மேற்கொண்ட செயற்பாடு அளப்பரியது. ´லிந்த லங்க சங்கமய´, ´அம்மா அம்மா´ போன்ற ஜிப்சீஸ் குழுவினரின் முதலாவது சொந்த படைப்புகள் மிகக் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமடைந்தன.

இந்நாட்டின் முதலாவது இடைவிடா இசை தொகுப்பு (Nonstop) அடங்கிய ஒலிப்பேழையை (Cassette) (ஜொலிய) 1981ஆம் ஆண்டு தயாரித்த சுனில் பெரேரா உள்ளிட்ட ஜிப்சீஸ் குழுவினர், 1987ஆம் ஆண்டு ´லுணுதெஹி´ என்ற பெயரில் நான்கு பாடல்களை உள்ளடக்கிய ஒலிப்பேழையை அறிமுகப்படுத்தினர்.

´ஜய மங்களம் வேவா!´, ´அம்மா அம்மா´, ´குருமிட்டோ´, ´லுணுதெஹி´, ´அபி தென்னா´, ´ஒயே ஒஜாயே´, ´பிடி கொடபன் நோனே´, ´அங்கல் ஜொன்சன்´, ´லதா நோ கதா´, ´லொவே செம எகம தெயே´ மற்றும் அண்மையில் பாடிய ´கொத்தமல்லி´ பாடல் ஆகியன சுனில் பெரேரா உள்ளிட்ட ஜிப்சீஸ் குழுவினரின் புகழை உச்சத்திற்கு கொண்டு வந்தது.

அரசியல் சித்தாந்தம் எதுவாக இருப்பினும் சுனில் பெரேரா ஒரு பாடகராகவும், இசைத்துறையில் சிரேஷ்ட கலைஞராகவும் இலங்கை மக்களின் இதயங்களில் என்னென்றும் நிலைத்திருப்பார் என்பது எனது நம்பிக்கை. தனது 68ஆவது வயதில் காலமான சுனில் பெரேரா அவர்களின் ஆத்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கின்றேன்.

சுனில் பெரேரா அவர்களின் மறைவால் துயருறும் அவரது மனைவி கீதா பெரேரா குலதுங்க, புதல்வர்களான சஜித் மற்றும் கயான், புதல்விகளான ரெஹானா, மனீஷா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும், சுனில் பெரேராவின் அன்பு இரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave A Reply

Your email address will not be published.