இந்தியாவில் தீவிரமாய் பரவும் டெங்கு காய்ச்சல்….நிரம்பி வழியும் மருத்துவமனைகள்!

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் உ.பி. அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் இந்தியாவின் பல மாநிலங்களை தாக்க தொடங்கியுள்ளது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 97 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது. அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள ஃபரோசாபாத்தில் இதுவரை 60 குழந்தைகளை பலியாகியுள்ள நிலையில் மேலும் 465 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆக்ராவில் காய்ச்சலால் பாதிக்கப்படும் 60 சதவிகித பேருக்கு டெங்கு கண்டறியப்படுவதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஃபரோசாபாத்தில் வீடுவீடாக செல்லும் அதிகாரிகள், வீதிகளில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்தி வருகின்றனர். கொசு முட்டைகளை உண்ணும் கம்பூசியா மீன்களையும் நீர்நிலைகளில் கொட்டி வருகின்றனர்.

இதேபோல் மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிராவின் மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை மும்பையில் மட்டும் 305 பேர் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு மும்பையில் 129 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர்.

மத்திய பிரதேசத்தில் கடந்த 12 நாள்களில் 2 ஆயிரத்து 510 பாதிக்கப்பட்டு, 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜபல்பூர் மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

டெல்லியில் இதுவரை 158 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 72 பாதிப்புகள் பதிவானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் டெல்லியில் இதுவரை டெங்கு உயிரிழப்புகள் பதிவாகவில்லை.

ஏடிஸ் கொசுவால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் குளிர்காலத்தில் அதிகமாக பரவுகிறது. அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி ஆகியவை அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு D2 என்னும் திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக அதிகாரிகள், இத்திரிபு மிகவும் ஆபத்தானது என்று எச்சரித்துள்ளனர். D2 திரிபு இரத்தப்போக்கை ஏற்படுத்தும் என்றும் ரத்த அணுக்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.