90 நாள்களுக்குப் பிறகு பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்.

சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையத்தில் தங்கியிருந்து விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்கும் பணியை மேற்கொண்டு வந்த 3 விண்வெளி வீரர்கள் 90 நாள்களுக்குப் பிறகு பூமிக்கு திரும்பினர்.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைத்துள்ளது. விண்வெளி தொடர்பான ஆய்வுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இங்கு தங்கி ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் சீனாவானது தங்கள் நாட்டிற்கென சொந்தமாக விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைத்து வந்தது. விண்வெளியில் சீனா அமைத்து வரும் தியான்காங் ஆய்வு நிலையத்தின் பிரதானப் பகுதியான தியான்ஹே, கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் வீரா்கள் அதில் தங்கியிருப்பதற்குத் தேவையான பொருள்கள், உபகரணங்கள் அடங்கிய சரக்குக் கலமான தியான்ஷோ, கடந்த மாதம் செலுத்தப்பட்டு தியான்ஹே கலத்துடன் இணைக்கப்பட்டது.

தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரா்களுடன் ஷென்ஷோ விண்வெளி ஓடம் கோபி பாலைவனத்தில் அமைந்துள்ள ஜிகுவான் ஏவுதளத்திலிருந்து கடந்த ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.

அந்த விண்வெளி ஓடத்தில் நை ஹாய்ஷெங் (56), லியூ போமிங் (54), தாங் ஹாங்போ (45) ஆகியோா் இருந்தனா். 90 நாள்கள் அங்கு தங்கியிருந்த அவர்கள் தியான்காங் விண்வளி நிலையத்தைக் கட்டமைக்கும் கடினமான பணியில் ஈடுபட்டு அதனை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து தங்களது பணிகளை நிறைவு செய்த அவர்கள் வெள்ளிக்கிழமை பூமியை நோக்கி திரும்பினர். அவர்கள் பயணித்த விண்கலம் சீனாவின் கோபி பாலைவனத்தில் தரையிறங்கியது. அவர்களை விண்கலத்திலிருந்து வெளியேற்றிய தொழில்நுட்ப பணியாளர்கள் அவர்களை மருத்துவ பரிசோதனையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.