மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி.

ஐபிஎல் 14வது சீசனில் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கின்றன. துபாயில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதின.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா முழு ஃபிட்னெஸுடன் இல்லாததால் இன்றைய போட்டியில் ஆடவில்லை. அதனால் பொல்லார்டு கேப்டன்சி செய்தார். மும்பை அணியில் ஹர்திக் பாண்டியாவும் ஆடவில்லை.

டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டுப்ளெசிஸை முதல் ஓவரிலேயே டிரெண்ட் போல்ட் டக் அவுட்டாக்கி அனுப்ப, 2வது ஓவரில் மொயின் அலியை ஆடம் மில்னே டல் அவுட்டாக்கினார். ரெய்னாவை 3வது ஓவரில் போல்ட் வீழ்த்த, வெறும் 7 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது சிஎஸ்கே. தோனியும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்தும், அதேவேளையில் அதிரடியாகவும் ஆடிய தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்தார். அவருடன் இணைந்து நன்றாக ஆடிய ஜடேஜா 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ருதுராஜுடன் ஜோடி சேர்ந்த பிராவோ, அதிரடியாக ஆடி 8 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் அடித்தார்.

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட், கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து இன்னிங்ஸை முடிக்க, 20 ஓவரில் 156 ரன்கள் அடித்தது சிஎஸ்கே அணி. கெய்க்வாட் 58 பந்தில் 88 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார்.

157 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர்கள் டி காக்(17), அன்மோல்ப்ரீத் சிங்(16) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் தீபக் சாஹரின் பந்தில் ஆட்டமிழந்தனர்.

சூர்யகுமார் யாதவ்(3), இஷான் கிஷன்(11), பொல்லார்டு(15) ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய சவுரப் திவாரி, அரைசதம் அடித்தார். ஆனால் அவருக்கு மறுமுனையில் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. 20 ஓவரில் 136 ரன்கள் அடித்த மும்பை அணி 20 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த வெற்றியையடுத்து 12 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது சிஎஸ்கே அணி.

Leave A Reply

Your email address will not be published.