ஆழ்கடல் மீன்பிடி கலங்களுக்கான அவதானிப்பு பொறிமுறையை சீர் செய்ய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை

Vessel Monitoring System எனப்படும் பலநாள் ஆழ்கடல் மீன்பிடி கலங்களுக்கான அவதானிப்பு பொறிமுறையை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த பொறிமுறையின் வினைத்திறனான செயற்பாடு உறுதிப்படுத்தப்படும் வரை அதற்கான சேவைக்கட்டணம் அறவிடப்படுவதனை இடைநிறுத்துமாறு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச ஏற்றுமதி நியமங்களுக்கமைய கடற்றொழிலில் ஈடுபடுகின்ற ஆழ்கடல் மீன்பிடி பலநாள் கலங்களுக்கு கடற்றொழில் திணைக்களத்தினால் குறித்த பொறிமுறை வழங்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் நாடளாவிய ரீதியில் இதுவரை சுமார் 1500 ஆழ்கடல் கலங்களுக்கு குறித்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான மாதாந்த சேவைக்கட்டணமும் அறவிடப்பட்டு வருகின்றது.

இந்த 1500 கலங்களில் 600 கலங்களில் மாத்திரமே குறித்த கருவிகள் செயற்பட்டு வருவதாகவும், பெரும்பாலான செயற்படாத கருவிகளுக்கும் மாதாந்த சேவைக்கட்டணம் அறவிடப்பட்டதாகவும் மீன்பிடி கலங்களின் உரிமையாளர்கள் முன்னர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.