பழங்கால நாணயங்களை இணையதளம் மூலம் விற்கப்போய் 50ஆயிரத்தை இழந்த கல்லூரி மாணவி

பழங்கால நாணயங்களை சேகரிக்கும் ஆர்வம் சிலருக்கு இருக்கும். மன்னர் காலத்தில் அச்சிடப்பட்ட நாணயங்கள், சுதந்திர இந்தியாவுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த நாணயங்கள் இல்லையென்றால் அரசு சில முக்கிய விழாக்களை குறிக்கும் வண்ணம் அச்சடிக்கப்பட்ட நாணயங்களை சேமிப்பதை சிலர் ஹாபியாக செய்வார்கள். நாணயங்கள் குறித்த அறிவு மற்றும் தேடல் காரணமாக இந்த பழக்கத்துக்கு வந்திருப்பார்கள்.

பழங்கால நாணயங்கள் இங்க வாங்கவும் விற்கவும் செய்யலாம் என சமீபகாலமாக இணையத்தளங்களில் விளம்பரங்கள் வருகின்றன. இதுபோன்ற இணையதளங்களில் நாணயங்களை விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதற்காக கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதிலும் சில இணையதளங்கள் போன் நம்பரில் இருந்து ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட விவரங்களை கேட்கின்றன. இந்த தளங்களில் வணிகம் செய்ய விரும்பினால் பதிவு கட்டணமாக சில ஆயிரங்களை கொடுக்க வேண்டும். இப்படி பதிவு செய்து பழைய நாணயங்களை இணையதளம் மூலம் விற்பனை செய்ய முயன்ற கல்லூரி மாணவி ஒருவர் சுமார் 50000 வரை இழந்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பீர்பம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி இணையதளம் மூலம் பழைய இரண்டு ரூபாய் நாணயங்களை விற்பதற்கு பதிவு செய்துள்ளார். அவரது மின்னஞ்சல் முகவரிக்கு அமெரிக்காவில் இருந்து ஒருவர் மெயில் அனுப்பியுள்ளார். பழைய இரண்டு ரூபாய் நாணயங்களை வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளார். தன்னிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் என இணையத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்தப்பெண்ணை தொடர்புக்கொண்ட நபர் பணத்தை கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். வாட்ஸ் அப்பில் அந்த நாணயத்தின் புகைப்படத்தை அனுப்புமாறு கூறியுள்ளார். கல்லூரி மாணவியும் அனுப்பியுள்ளார்.

இதுவரை எல்லாம் நன்றாக சென்றுள்ளது. அந்த நபர் தான் வங்கி கணக்கில் ஒரு லட்சம் செலுத்தியதற்கான ரசீதை ஸ்க்ரீன் ஷாட்டை அனுப்பியுள்ளார். நான் அனுப்பியது அமெரிக்க டாலர் அதனை இந்திய ரூபாய் மாற்ற 5 ஆயிரம் கேட்கிறார்கள் எனக் கறியுள்ளார். இதனையடுத்து அந்த கல்லூரி மாணவி upi மூலம் 5000 அனுப்பியுள்ளார். அதன்பின்னர் ரூ.6100, 22000 என கட்டணமாக கேட்டுள்ளனர்.

அவரது மெயிலுக்கு பேங்க் ஆப் அமெரிக்கா என்ற பெயரில் மின்னஞ்சல் வந்துள்ளது. கடைசியாக 33000 கட்டணமாக கேட்டுள்ளனர். இந்தப்பணம் எல்லாம் திரும்ப வந்துவிடும் எனக் கூறியுள்ளனர். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப்பெண் இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.