“நிறைய படைப்பாளிகள் ஓ.டி.டி-யால் காப்பாற்றப்படுகிறார்கள்!” – `அஷ்வமித்ரா’ இயக்குநர் கௌசல்யா

“நாம் யூகிக்க முடியாத கோணத்தில்தான் குழந்தைகள் நம்மிடம் பழகுகிறார்கள். குழந்தைகளின் புரிந்துணர்வையும், குழந்தைகளைப் பற்றிய நம் புரிந்துணர்வையும் முன்னிலைப்படுத்துவதுதான் `அஷ்வமித்ரா’.”

பல நட்சத்திரங்களுக்கு வெளிச்சமும், பல நபர்களுக்கு வாழ்க்கையும் கொடுத்த பெரிய துறை சினிமா. என்றாலும், சினிமா நதியில் லாகவமாக நீந்தி மீன் பிடிப்பது சுலபமில்லை. அதில் தாமதம் ஆகிறவர்களுக்கு இன்னொரு வாசலாக அமைந்தது ஓ.டி.டி (over-the-top) தளங்களின் வருகை.

அந்த வரிசையில், சமீபத்தில் ஓ.டி.டி-யில் வெளியாகியிருக்கிறது, எர்த்லிங் கௌசல்யா இயக்கியுள்ள `அஷ்வமித்ரா’. ஒரு துயர சம்பவத்தால் பேச்சை இழக்கும் குழந்தைக்கு, பேச்சுப் பயிற்சியாளராக வருகிறார் `அருண்’. `அருணு’க்கும் அந்தக் குழந்தைக்கும் நடுவில் நடக்கும் நிகழ்வுகளைத் திரைக்கதையாக்கியுள்ளார் கௌசல்யா. `கைதி’, `பைரவா’ திரைப்படங்களில் நடித்துள்ள ஹரிஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, நீஸ்ட்ரீம் (Neestream) ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ளது `அஷ்வமித்ரா’. அதன் இயக்குநர் எர்த்லிங் கௌசல்யாவிடம் பேசினோம்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!


“அஷ்வமித்ரா… ஏன்? எதற்கு?”

“எப்பொழுதும் குழந்தைகளிடம் பெரியவர்கள், `நான் பெரியவன், எனக்கு எல்லாம் தெரியும்’ என்னும் எண்ணத்துடன்தான் பழகுகின்றனர். ஆனால், குழந்தைகள் நம்மை பார்க்கும் விதம் முற்றிலும் மாறுபட்டது, ஆழமானது. நாம் யூகிக்க முடியாத கோணத்தில்தான் குழந்தைகள் நம்மிடம் பழகுகிறார்கள். குழந்தைகளின் புரிந்துணர்வையும், குழந்தைகளைப் பற்றிய நம் புரிந்துணர்வையும் முன்னிலைப்படுத்துவதுதான் `அஷ்வமித்ரா’வின் ஐடியா. ஒரு குழந்தையுடன் பழகி அதை மகிழ்விக்க முயலும்போது நமக்குள்ளேயும் மகிழ்ச்சி ஊறும்தானே?!”

“தமிழ், தெலுங்கு மெயின்ஸ்ட்ரீம் படங்கள்ல நடிச்சுட்டு இருக்கிற ஹரிஷ் உத்தமன் படத்துக்குள் எப்படி வந்தார்?”

“ஹரிஷ் உடன் ஏற்கெனவே ஷார்ட் ஃபிலிம்ஸில் பணிபுரிந்திருக்கிறேன். `களைவு’, `ஆழ்கடல்’ என அவர் நடித்த அந்தப் படங்கள் எல்லாம் ஹிட். அவர் தொடர்ந்து வில்லன் அல்லது போலீஸ் கதாபாத்திரங்கள்தான் செய்துகொண்டிருந்தார். வித்தியாசமான காதல் கதைகளை அவரால் நன்றாகப் பண்ண முடியும் என்று தோன்றவே, 2015-ல் `களைவு’ பண்ணினோம். `ஆழ்கடல்’ படத்தில் எழுத்தாளராக நடித்திருப்பார். அந்த இரண்டு படங்களுக்கும் நான் எழுத்து மட்டும்தான். என் நண்பர் இயக்கினார். ஹரிஷ் உடன் வேலை செய்த அனுபவம் மிகவும் கம்ஃபர்ட் ஆக இருக்கும். அதனால் `அஷ்வமித்ரா’வில் அவரை முதன்மைக் கதாபாத்திரத்தில் பயன்படுத்த முடிவு செய்தோம். இந்தப் படத்தில் மிகவும் மென்மையான ஜென்டில் ரோல் செய்திருப்பார். குழந்தையோடு அவர் இருக்கும் காட்சிகளை எல்லாம் முழுமையாகச் செய்திருப்பார்.”

“உங்களுடைய சினிமா பயணம் பற்றி..?”

“நான் ஆர்கிடெக்சர் படித்தேன். ஆனால் எழுத்தில் மிகவும் ஆர்வம். 2007-ல் ஒரு புக் எழுதினேன். ரிக்‌ஷாகாரர்கள், தெருவோரப் பள்ளிகள் என முதலில் ஆவணப் படங்களில்தான் பணிபுரிய ஆரம்பித்தேன். எங்கள் டீமில் மொத்தம் நான்கு பேர். `களைவு’, `ஆழ்கடல்’ படங்களை இயக்கிய ரகு `ஐந்நூரும் ஐந்தும்’ என்று ஒரு படம் பண்ணினார். அதுதான் எங்கள் முதல் முழுநீளப் படம். ஆனால், அந்தப் படத்தை ரிலீஸ் பண்ண முடியவில்லை. யூடியூபில் ரிலீஸ் செய்தோம். பிறகு, நாங்கள் செய்த சில ஆவணப்படங்கள் சர்வதேச அளவில் விருதுகள் பெற்றன. ஒரு கற்பனைக் கதையை படமாக எடுக்க வேண்டும் என்ற என் முயற்சிதான், `அஷ்வமித்ரா’.”

“படத்துக்கான விமர்சனங்கள்..?”

“நீஸ்ட்ரீம் ஓடிடிக்கு எனத் தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். நீஸ்ட்ரீம் படங்கள் கரு அடிப்படையில மிகவும் நன்றாக இருக்கும், அதன் ரசிகர்களும் அதைத்தான் விரும்புவார்கள். முன்னர் மலையாளப் படங்கள் வந்துகொண்டிருந்த அந்த பிளாட்ஃபார்மில் இப்போது தமிழ்ப் படங்களும் வரத் தொடங்கியுள்ளன. `அஷ்வமித்ரா’வுக்கான விமர்சனங்களில் பாசிட்டிவ் கமென்ட்களே நிறைய. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த இண்டிபென்டன்ட் ஃபிலிம், ஓர் அடையாளம் வேண்டி எடுக்கும் முயற்சி. கமர்ஷியல் படம் செய்ய தயாரிப்பாளர்கள் கிடைக்க வேண்டும். ஆவணப்படங்கள் எடுக்கவே கையில் இருந்து பணம் போடுவது, நண்பர்களின் உதவி என்றுதான் புராஜெக்ட்டை முடிக்க முடிந்தது.”

“ஓடிடியின் வரவு..?”

“ `அஷ்வமித்ரா’ படத்தை 2019-ல் எடுத்து முடித்ததும் ஒரு திரைப்பட விழாவுக்கு அனுப்பினோம். கொரோனா லாக்டௌன் முடிய காத்திருந்தோம். ஒரு கட்டத்துக்கு மேல், இனியும் படம் தூங்கக்கூடாது என்று முடிவு பண்ணி, ஓடிடியில் ரிலீஸ் செய்தோம். ஓடிடி, எளிய, இளைய கலைஞர்களுக்குப் பெரிய வரம். படங்களைத் தியேட்டரில் பார்ப்பது தனித்த அனுபவம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. என்றாலும், நிறைய ஃபிலிம் மேக்கர்ஸ் ஓடிடியால் காப்பாற்றப்படுகிறார்கள்.”

“சினிமாவில் பெண்களுக்கான இடம்..?”

“சினிமாவில் பெண்கள் வளர்ந்து வருகிறார்கள். நம் முந்தைய பெண்களின் நெடிய, நீண்ட பயணத்தின், போராட்டத்தின் பலனாக இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பெண்களுக்கான இடம் பகிரப்பட்டு வருகிறது. இன்னும் நிறைய பெண் எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் வர வேண்டும். அதிகப் பெண்கள் உள்ளே வரும்போது, பெண்களின் கோணத்தில் ரசிகர்களுக்கும் புது சினிமா அனுபவங்கள் கிடைக்கும்.”

“ஒரு பெண் படைப்பாளியா நீங்க சந்திச்ச பிரச்னைகள்?”

“நாங்கள் ஒரு குழுவாக இயங்குவதால், பெரிய பிரச்னைகள் எதுவும் வந்தது இல்லை. ஃபிலிம் மேக்கர்ஸ் எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் எனக்கு வந்தது… பெண் என்பதால் அல்ல. ஆனால், எங்கள் குழுவின் முதல் படம் முடித்தபோது நாங்கள் சென்ற எல்லா டிஸ்ட்ரிபியூஷன் ஆபீஸ்களிலும் ஆண்கள் மட்டும்தான் இருந்தார்கள். ஒரு பெண்ணைக்கூட அங்கு பார்க்க முடியவில்லை. எனவே, சினிமாவின் எல்லா தளங்களிலும், அதேபோல, மற்ற துறைகளிலும் அதன் எல்லா தளங்களிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டும். அந்தப் பயணத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும்.”

Leave A Reply

Your email address will not be published.