யாதும் ஊரே யாவரும் கேளிர்! நாடோடிகள் (கட்டுரை) – கோதை

நாமும் இன்று நாடோடிகளே. அது ஒரு புறமிருக்க அண்மையில் பாடசாலையில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தினால் இங்கு இங்கிலாந்தில்  உள்ள, நாடோடிகளைப் பற்றிய அனுபவத்தை சிலரோடு பகிர வேண்டியிருந்தது. அதையே இங்கு பகிர்வது அதன் ஒரு பகுதியாகிறது.

 

எனது வகுப்பறையில் இந்தக் கட்டுரை சொல்லப்போகும் இரு வகை நாடோடிக் குழந்தைகளும் இருந்திருக்கிறார்கள். அவர்களை எல்லாக் குழந்தைகளையும் வரவேற்பது போலவே வரவேற்று, கல்வி கற்பித்திருக்கிறேன். மற்றைய குழந்தைகள் போலல்லாது இவர்களுடைய வாழ்க்கைப் பின்னனி மிகவும் வித்தியாசமானது. இதன் காரணமாக இவர்களுடைய மனங்களுக்கு வலுவூட்டி, தைரியம் கொடுத்து மற்றைய குழந்தைகளோடு பழகவும், தமது வாழ்க்கை முறை பற்றி பாடசாலையில் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி தம் அடையாளத்தை நல்ல முறையில் நிலை நிறுத்திப் பெருமைப்படவும் அவர்களை ஊக்குவிப்பது ஆசிரியர்களாகிய எமது கடமையாகிறது. எமது சமுதாயத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகள் போலவே ஆங்கிலேயர்களும் இவர்களிடமிருந்து தம்மை வேறுபடுத்திப் பார்க்கிறார்கள் என்பது துயரம்.

 

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இங்கு இங்கிலாந்தில் இரு வேறு வகைப்பட்ட நாடோடிகள் இருக்கிறார்கள். இது குறித்து அறியும் ஆவல், எமது பாடசாலையொன்றில் ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட்ட காரணத்தினால் இன்னும் அதிகரித்தது.

இவர்களை ‘ஜிப்ஸி’ என அழைப்பது அரசால் சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்டு, அரசியல் ரீதியில் திருத்தம் செய்யப்பட்டு, இப்போது ஆங்கிலத்தில் ஐரிஷ் நாடோடிகள்,  ரோமா அல்லது ரோமானியன் நாடோடிகள்(  “Irish Traveller families’  and Roma Travellers) என இருவகையினரும் அழைக்கப்படுகின்றனர். ரோமா நாடோடிகள் என்ற பெயர் ரோமேனியன் நாட்டின் காரணப் பெயரால் வந்தது அல்ல என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.

இவர்களில்  முதலாவது வகையினர் தான் பள பளப்பான நீளமான உடைகள், தங்கம் போல மினுமினுக்கும் அணிகலன்கள், பெண்களுக்கு நீண்ட பின்னல் போன்றவற்றால் தம்மை அடையாளப்படுத்துகிறார்கள். இவர்களை உற்று நோக்கினால் அவர்களது நிறம் தவிர்ந்த, உடை அலங்காரம் வட இந்திய வகை போலவே காட்சியளிக்கும்.

 

இவர்களது சரித்திரம் அலாதியானது, இவர்கள் வட இந்திய மலை சார்ந்த இடங்களிலிருந்து ஐரோப்பியாவுக்குள் நுழைந்ததாகவும், வழி வழியே ஐரோப்பிய கலப்பு ஏற்பட்டு , இதனாலேயே இவர்கள் பார்ப்பதற்கு இந்திய- ஐரோப்பிய கலப்பு போல இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பார்ப்பதற்கு ஒரு தனித்தன்மையோடு கூடிய அழகோடு இருப்பார்கள். முன்பு,   இவர்களை சரித்திரத்தில் ரொமேனியன் ஜிப்ஸிகள் எனக் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரொமேனியப் பெண் ஒருவர் என்னிடம் பேசும் போது ‘இவர்கள் எம்மினத்தவர் இல்லை, இவர்கள் இந்தியர்கள்.’ எனக்கூறியது என்னை ஆச்சர்யப்பட வைத்தது. இவர்களுக்கு இங்கு அவ்வளவாக நல்ல பெயர் கிடையாது, ஏனெனில் இவர்களில் அனேகமானவர்கள் தமது பெயரை,   கடைகளில் உணவுப் பொருட்கள், இனிப்புகள், சிறிய பொருட்களைத் திருடுவது, கடை உரிமையாளர்கள் அதைக் கண்டு பிடித்துக் கேட்கும் பட்சத்தில் அடிதடியில் இறங்குவது , தம் குழந்தைகளைக் காட்டிப் பிச்சையெடுப்பது, அவர்களை பாடசாலைக்கனுப்ப மறுப்பது, அப்படியில்லை என்று மன்றாடி அழைத்து வந்தால், ஒரு சில நாட்களில் தாம் வசிக்கும் இடத்தை விட்டு குடும்பமாக ஓடி விடுவது என்று  கெடுத்துக் கொண்டமையே காரணம்.

இவர்கள் ஐரிஷ் நாடோடிகள் போல தொடர்ந்தாற் போல ஒரே இடத்தில் வசிக்காமல் மிகக்குறுகிய காலப் பகுதியில் இன்னொரு இடத்தை நோக்கி நகர்ந்து விடுவார்கள். இதன் காரணமாக இவர்களது குழந்தைகளுக்கு பாடசாலைக் கல்வியைக் கொடுப்பதில் ஆசிரியர்களுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன.

இரண்டாவது வகையினர் அயர்லாந்து – ஐரிஷ் நாடோடிகள் ( Irish travellers) என அழைக்கப்படுகிறார்கள். நான் படிப்பித்த, படிப்பிக்கின்ற பாடசாலைகளில் இவர்கள் குழந்தைகள் படிக்கிறார்கள். இவர்கள் காலம் காலமாக தமக்காக அமைக்கப்பட்ட ஒரு வித்தியாசமான குடிமனைகளில் வசிக்கிறார்கள். மிகவும் சுத்தமான குடிமனைகள் இவை (Permanent Caravan side).
இவர்கள் குதிரை வளர்ப்பு, விவசாயம், கட்டடக்கலைகள் போன்ற, தனிப்பட்ட – தனியார்  தொழில்களை மேற்கொள்கிறார்கள்.

இவர்களில் அனேகமானவர்கள் 16, 17 வயதிலேயே தம் குடும்ப உறவுகளில் திருமணம் செய்து கொள்கிறார்கள். இது குறித்து சில கருத்து வேறுபாடுகளும் அண்மைக்காலத்தில் கவனத்திற் கொண்டு வரப்பட்டது. இச்சமுதாயத்தில் திருமண வயதை எட்டாத பெண் குழந்தைகளைப் பலவந்தமாக திருமணம் செய்து கொடுக்கிறார்கள் என்பதே அது.

ஐரிஷ் நாடோடிக் குடும்பங்கள் தமது குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதில் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஒரு ஆசிரியையாக, அவர்களது குழந்தைகள் புதிதாக எமது பாடசாலக்கு வரும் போது, பாடசாலை சார்பில் இவர்களது சிறு குடிமனைகளுக்கு போயிருந்திருக்கிறேன். அன்புடன் வரவேற்று, உபசரிப்பார்கள். குதிரைகள், நாய்கள், பூனைகள் போன்ற விலங்குகள் அவர்களது குடிமனையைச் சுற்றியுள்ள நிலங்களில் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன.

இந்த ஐரிஷ் நாடோடிகள், நிரந்தரமான, ஆனால் இழுத்து கொண்டுபோகக் கூடிய சிறு குடிமனைகளில் நீண்ட காலத்திற்கு இருப்பார்கள். முதலாவது வகை நாடோடிகளுக்கும் இவர்களுக்கும் பெரிதாய் ஒத்து வருவதில்லை. அவர்கள் தம் பெயரைக் கெடுப்பதாக இவர்கள் ஆதங்கப்படுவார்கள்!

ஒருமுறை எனது வகுப்பில் இருந்த இந்த ஐரிஷ் நாடோடிக் குழந்தை ஒன்று எழுதிய ஒரு சிறு பத்தியை வாசித்துக் காட்டும் படி என்னை கேட்ட, படிப்பறிவில்லாத அவன் தாய் முதன் முதலாக கல்வி அறிவு கிடைத்த தன் தனயனை உச்சி முகர்ந்து,  ஆனந்தக் கண்ணீர் வடித்தது இன்றும் என் நெஞ்சில் நிற்கிறது.

Leave A Reply

Your email address will not be published.