நவராத்திரி ஸ்பெஷல்: பச்சை பட்டாணி சுண்டல்

நவராத்திரி ஆரம்பமாகிவிட்டது. உங்கள் வீட்டில் நவராத்திரியின் 9 நாட்களும் பூஜை செய்பவராயின், நிச்சயம் அம்மனுக்கு நிவேத்தியத்திற்கு ஏதாவது படைக்க வேண்டியிருக்கும். அதில் பெரும்பாலானோர் சுண்டல் செய்வார்கள். சுண்டலில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று பச்சை பட்டாணி சுண்டல். இந்த சுண்டல் செய்வது மிகவும் எளிது. சுண்டலை பண்டிகை காலங்களில் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து சாப்பிடலாம்.

பச்சை பட்டாணி சுண்டல் எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து அம்மனுக்கு படைத்து, பின் சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

தேவையான பொருட்கள்: உலர்ந்த பச்சை பட்டாணி – 1/2 கப் * உப்பு – சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன் * பச்சை மிளகாய் – 2
* சீரகம் – 1/2 டீஸ்பூன் தாளிப்பதற்கு… * எண்ணெய் – 2 டீஸ்பூன் * கடுகு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது * பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை: * காய்ந்த பச்சை பட்டாணியை இரவு தூங்கும் போது நீரில் ஊற வைக்கலாம் அல்லது குறைந்தது 4 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். * பின் குக்கரில் ஊறிய பச்சை பட்டாணியை போட்டு போதுமான அளவு நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். * பின்பு குக்கரைத் திறந்து, அதில் உள்ள நீரை வெளியேற்றிவிட்டு, பட்டாணியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். * பிறகு மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள, தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் சீரகத்தைப் போட்டு நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். * பின் வேக வைத்துள்ள பச்சை பட்டாணியை சேர்க்க வேண்டும்.

அதன் பின் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2-3 நிமிடம் பச்சை மிளகாயின் பச்சை வாசனை போக நன்கு கிளறிவிட்டு இறக்கினால், சுவையான பச்சை பட்டாணி சுண்டல் தயார்.

குறிப்பு: இரவு தூங்கும் முன் பட்டாணியை ஊற வைத்தால், 2 விசில் விட்டால் போதும். ஆனால் 4 மணிநேரம் மட்டுமே ஊற வைத்தால், 3-4 விசில் விட வேண்டும். விருப்பமுள்ளவர்கள் பட்டாணியை வேக வைக்கும் போது உப்பு சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் தாளிக்கும் போது சுவை பார்த்து உப்பு சேர்க்க வேண்டும்.

வேண்டுமானால், தாளிக்கும் போது சிறிது இஞ்சியை சேர்த்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு வேண்டிய காரத்திற்கு ஏற்றவாறு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள், மஞ்சள் பட்டாணியில் கூட இந்த சுண்டலை செய்யலாம்.

Leave A Reply

Your email address will not be published.