நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நிர்வாகி இழப்பு : பிரதமர் இரங்கல்.

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண (Kumaradasa Mappana) முதலியார் சிவபதமடைந்துள்ள நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) இரங்கல் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கைத் திருநாட்டிலே சமய சக வாழ்விற்கு ஆதாரமாக இருக்கும் ஒரு கோயில் – நல்லூர்க் கந்தசுவாமி கோயில். இங்கு இன மத பாகுபாடு பாராட்டப்பட்டு யாரும் கண்டதில்லை. இறைவன் சந்நிதியில் அனைவரும் ஒன்றே என்ற உண்மையை நாம் இங்கு காண முடியும்.

நம் தாய்த்திருநாட்டின் உலகறிந்த அடையாளம் இந்தப் பெருமை மிகு ஆலயம். அருள் ஒளி வீசும் அற்புத ஆலயம். நம் தேசத்திற்குப் பெருமை தரும் வகையில், உலகப்புகழ் பெற்ற நல்லைக் கந்தன் ஆலயத்தின் நிர்வாகத்தினைச் சிறப்புற முன்னெடுத்தவர் குகஸ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள்.

அவருக்குக் கந்தப்பெருமானின் அருட்கடாட்சம் எப்போதும் துணை நின்றது. அதுவே குகஸ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்களைச் செயலாற்றல் மிக்க அடியவனாக்கியது.

அப்படிப்பட்ட மகோன்னத புருஷரின் இழப்பு, நம் அனைவருக்கும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு.

அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியுற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.