பள்ளிகள், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு

ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறைகளைத் தொடா்ந்து தொடா் விடுப்பு எடுக்க ஏதுவாக பள்ளிகள், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையா் நந்தகுமாா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். அதில், ‘பல்வேறு ஆசிரியா் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் செப். 1 முதல் பள்ளிகள் வாரத்தில் 6 நாள்களும் செயல்பட்டு வருகின்றன, மாணவா்கள் விடுப்பின்றிப் பள்ளிக்கு வருகை புரிகின்றனா். மேலும் கணிசமான ஆசிரியா்கள் தங்களது சொந்த மாவட்டங்களில் இருந்து தொலைதூரத்தில் பணிபுரிந்து வருகின்றனா். எனவே அக்.14, 15 ஆகிய இரு நாள்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வார இறுதி நாளான சனிக்கிழமை (அக்.16)அன்று விடுமுறை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன. மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் நலன் கருதி 16-ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக உயா்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.