’பால் பண்ணை, இறந்த பசுவில் இருந்து உரம்’ – மாதம் ரூ.10 லட்சம் சம்பாதிக்கும் சிவில் இன்ஜினியர்!

கர்நாடகாவைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஒருவர் பால் பண்ணை மூலம் மாதம் ரூ.10 லட்சம் ரூபாய் சம்பாதித்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வளர்ந்துள்ளார்.

கால்நடை வளர்ப்பை முறையாக செய்பவர்களுக்கு நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பால், தயிர் மற்றும் மோர் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை விற்பனை செய்யலாம் என்பதுடன், அதன் சாணம் ஆகியவற்றையும் உரமாக விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம். அதற்கு முன்னுதாரணமாக கர்நாடகாவைச் சேர்ந்த ஜெயகுரு ஆச்சார் ஹிந்தர் என்ற 26 வயது இளைஞரைக் கூறலாம். பி.இ சிவில் இன்ஜினியரிங் முடித்த அவருக்கு, சரியான வேலை அமையவில்லை.

இதனால், என்ன செய்வதென யோசித்த ஜெயகுரு, வீட்டில் இருக்கும் கால்நடைகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டார். ஏற்கனவே 10 மாடுகள் இருந்ததால் அதனை பராமரிப்பதற்கு தேவையான உபகரணங்கள் வாங்கிப்போட்டு, பண்ணையாக மாற்ற முடிவு செய்தார். நவீன டெக்னாலஜியை புகுத்தியதும் கால்நடை பராமரிப்பு எளிதானதுடன், பால் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

இப்போதைய நிலையில் மாட்டுப் பண்ணை மூலம் மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறார். இதுகுறித்து அவர் பேசும்போது, ” எனக்கு எந்த வேலையும் முறையாக அமையவில்லை. 22 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்தில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். ஒரு வருடம் வேலை செய்தபிறகு, அந்த வேலையில் எனக்கு உடன்பாடில்லை. வீட்டில் ஏற்கனவே மாடுகள் இருந்ததால், மாட்டுப் பண்ணை அமைக்கலாம் என நினைத்து, பண்ணையை விரிவாக்கம் செய்தேன். எங்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் மாட்டுக்கு தேவையான தீவனங்களை வளர்த்துக் கொள்கிறேன். இதனால், மாதம் 10 லட்சம் ரூபாய் எளிதாக சம்பாதிக்க முடிகிறது” என ஜெயகுரு கூறினார்.

மாட்டு சாணம் :

தொடர்ந்து பேசிய ஜெயகுரு “மாட்டு சாணம் விற்பனையில் பெரிய வர்த்தகம் இருப்பதை அறிந்தேன். அதனால், பஞ்சாபுக்கு சென்று மாட்டு சாணங்களை உலர வைக்கும் மெஷின் ஒன்றை வாங்கி வந்து, எங்கள் பண்ணையில் இருக்கும் சாணங்களை உலர வைத்து விற்பனை செய்கிறேன். மாதம் தலா 1,000 மாட்டு சாண பைகள் விற்பனையாகிறது. உள்ளூர் மற்றும் பக்கத்து கிராம விவசாயிகள் வந்து உலர் சாணங்களை உரத்துக்காக வாங்கிச் செல்கின்றனர்” என்றார்.

மாட்டின் சாணம், சிறுநீர் மட்டுமல்லாது மாடுகளை கழுவ பயன்படும் நீரையும் விற்பனை செய்கிறேன். விவசாய நிலங்கள் மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்காக தொழிற்சாலையினர் கூட வாங்கிச் செல்கின்றனர். ஒரு லிட்டர் 8 ரூபாய் முதல் 11 ரூபாய் வரை அந்த நீரை விற்பனை செய்து வருகிறேன் எனவும் ஜெயகுரு தெரிவித்துள்ளார்.

இறந்த பசு உரம் :

ஆன்லைனில் இறந்த பசுவில் இருந்து உரம் தயாரிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொண்டேன். அந்த உரத்தை கோனாண்டஜலா என கூறுவார்கள். இதில் அதிக ஊட்டசத்து உள்ளது. பயிர்களின் வளர்ச்சியை வேகப்படுத்தும். இதனை எப்படி தயாரிப்பது என்றால், மாடுகள் இறந்த பிறகு அதன் சடலத்தை எரிக்க அல்லது புதைக்காமல், ஒரு பெரிய கொள்கலனில் அதனை போட்டு வைக்க வேண்டும். அத்துடன் மாட்டு சிறுநீர், பால், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை குறிப்பிட்ட விகிதாச்சாரத்துடன் கலக்க வேண்டும்.

பின்னர், 6 முதல் 7 மாதங்கள் வரை அப்படியே அந்த கொள்கலனை மூடி வைத்துவிட வேண்டும். அதில் இருந்து வெளியாகும் திரவத்தை எடுத்து, ஒரு லிட்டருக்கு 100 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து பயிர்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் எனக் கூறும் ஜெயகுரு. தினமும் 750 லிட்டர் பால், மாதம்தோறும் 30 முதல் 40 கிலோ நெய் விற்பனை செய்து வருகிறார்.

தங்கள் பண்ணையில் முழுமையாக இயற்கை முறையில் அனைத்து பொருட்களும் தயாரிக்கப்படுவதாக கூறியுள்ள அவர், அரசு பல்வேறு கடன்களையும் திட்டங்களையும் வழங்குவது மிகவும் உபயோகமாக இருந்ததாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.