கந்த சஷ்டி விரதம் என்பது…

எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.

குறிப்பாக குழந்தை பாக்கியம்
வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும் பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் 6-வது திதி கந்த சஷ்டி திதியாகும். ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.

கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது. காலை, மாலை வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும்.

முருகப்பொருமானுக்கு உகந்த எண் 6.அவர் ஆறு முகங்களுடன் அவதரித்தார். குழந்தை பருவத்தில் அவரைப் பராமரித்த கார்த்திகை பெண்களின் எண்ணிக்கை 6. தன் ஆட்சிக்குரிய பகுதியாக அவர் தேர்ந்ததெடுத்தது அறுபடை வீடு. சஷ்டி என்பதும் ஆறாம் எண்ணைக் குறிக்கும். இதனால் தான் முருகனின் அருளைப் பெற சஷ்டியில் விரதம் இருக்க வேண்டும் எனபர்.

இந்த 6 நாட்கள் விரதத்தின் போது, ” சரவண பவ ” எனும் ஆறெழுத்து மந்திரத்தையும், சஷ்டி கவசத்தையும் படித்து வருவோருக்கு முன் வினைகள் நீங்குவதோடு, இல்லத்தில் ஐஸ்வரியமும், மகிழ்ச்சியும் ஓங்கும் என்பது கந்த புராணம் சொல்லும் செய்தி. மழலை செல்வம் அருளும் விரதங்களில் முதன்மையானது இது என்றும் போற்றப்படுகிறது.

இதே விரதத்தை ஒவ்வொரு மாதமும் சஷ்டி விரத சமயத்தில் கடைப்பிடிக்கலாம்.சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகி விடும். விரதத்தை கடைபிடிக்க கடைபிடிக்க பக்தர்களுக்கு எண்ணிய நலமும், புண்ணிய பலமும் கிடைக்கும்.

Leave A Reply

Your email address will not be published.