குற்றவியல் நடைமுறை கோவை திருத்தம் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும்!

தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள குற்றவியல் நடைமுறைக் கோவை திருத்த சட்டமூலம் நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதுடன் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்குவதாக அமையும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“நாட்டில் தற்போது அமுலிலுள்ள குற்றவியல் நடைமுறை தொடர்பான வழிகாட்டல்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த 08.10.2021 அன்று அரசால் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன் பிரகாரம், ஒருவர் கைது செய்யப்பட்டால் நாற்பத்தெட்டு மணிநேரம் வரையில் அவரை நீதிவான் நீதிமன்றத்திலோ அல்லது மேல்நீதிமன்றத்திலோ ஆஜர்படுத்தாமல் இருப்பதற்கு இந்தத் திருத்தம் வழிவகை செய்கின்றது.

இலங்கையில் ஏற்கனவே மனித உரிமைகளுக்கு விரோதமான பல சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றன. இதில் முக்கியமாக பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது 1978ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாகக் கொண்டுவரப்பட்டு, இன்றுவரை 43 வருடங்களாக அமுலில் இருக்கின்றது. ஏற்கனவே, இது இலங்கை மக்களுக்கான அடிப்படை உரிமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் மறுத்து, பதினெட்டு மாதங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது.

இந்தச் சட்டமூலம் அகற்றப்பட வேண்டும் அல்லது திருதப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை வற்புறுத்தியபோதிலும்கூட இன்னமும் அவை அகற்றப்படாமலே இருக்கின்றது.

இது ஒருபுறமிருக்க, இலங்கையின் ஜனாதிபதி அவர்கள் பதவி ஏற்றவுடன், இராணுவத்திலிருந்த பல்வேறுபட்ட உத்தியோகத்தர்களை பொறுப்பு வாய்ந்த சிவில் நிர்வாகங்களுக்கு அமர்த்தியுள்ளார். இது எதிர்காலத்தில் இந்த நாடு ஒரு இராணுவ ஆட்சிக்கு உட்படுமாக இருந்தால், சிவில் நிர்வாகத்தை இலகுவாக தம் வசம் வைத்திருப்பதற்கான ஒரு ஏற்பாடாகவே எல்லோராலும் கருதப்படுகின்றது. குறிப்பாக நாடு இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில், விவசாயம், மீன்பிடித் தொழிலாளர்கள் மாத்திரமல்லாமல், அரச உத்தியோகத்தர்கள் உட்பட குறைந்தபட்ச வாழ்வாதாரங்களுக்காக போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இந்தநிலையில்தான், குற்றவியல் நடைமுறை கோவை திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இந்தத் திருத்தங்களும் நாட்டின் குடிமக்களுக்கான ஜனநாயக உரிமைகளை மறுதலிப்பதுடன், கைது செய்யப்பட்டால் அவர் உடன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படை உரிமையையும் மறுதலிக்கின்றது. ஏற்கனவே இலங்கை பொலிசார் உச்சபட்ச அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது மாத்திரமல்லாமல் பெருமளவில் இலஞ்ச ஊழல்வாதிகளாகவும் இருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், ஒரு சந்தேக நபரை நாற்பத்தெட்டு மணிநேரம் காவலில் வைத்திருப்பது என்பது அவரை சித்திரவதை செய்யவும் தமது விருப்பத்திற்கேற்ற வாக்கு மூலத்தைப் பெற்றுக்கொள்ளவும் இந்த கால அவகாசங்கள் உதவும் என்றே நாம் நம்புகின்றோம்.

பொலிஸார் தமது தேவை கருதியோ அல்லது வேறு சில அரசியல்வாதியின் தேவை கருதியோ அல்லது தனிப்பட்ட முறையில் தமது நண்பர்களுக்கு உதவும் வகையிலோ இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடவழிவகை செய்கிறது. எனவே, இந்தக் குற்றவியல் நடைமுறைக் கோவை திருத்தங்கள் என்பது ஒட்டுமொத்தமான இலங்கை மக்களுக்கும் பாதகமாகவே அமையும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இவற்றுக்கு அப்பால் அரசுக்கு எதிராகக் குரல்கொடுக்கக்கூடிய சிறிய பெரிய அரசியல் கட்சிகளை ஒடுக்குவதற்கும் அவர்களது குரல்வளையை நசுக்குவதற்கும் ஜனநாயக முற்போக்கு, சிவில் அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அவர்களது ஜனநாயக செயற்பாடுகளை முடக்குவதற்கும்கூட இந்தத் திருத்தங்கள் பாவிக்கப்படலாம்.

இந்த அரசு பதவிக்கு வந்த பின்னர் கொண்டுவரப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டமும் சரி, குற்றவியல் நடைமுறைக் கோவை திருத்தச் சட்டமூலமானாலும் சரி, சிவில் நிர்வாகத்துக்கு இராணுவத்தினரை நியமித்தமையும் சரி, அனைத்து விடயங்களுமே சட்டரீதியாக எதேச்சாதிகாரத்தை நோக்கி இந்த நாட்டைக் கொண்டு செல்வதற்கே வழிவகுத்து வருகின்றது.

அரசு தனக்கு அதிகப் பெரும்பான்மை இருக்கிறதென்ற அடிப்படையில் இது சட்டமாக்கப்படலாம். ஆனால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் இவை சட்டமாவதன் ஊடாக நாட்டு மக்களுக்கு பாரியதோர் அச்சுறுத்தலாக அமையும் என்பதைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றோம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.