மக்களின் பிரச்சினைக்கு அரசிடம் தீர்வு இல்லை! – சஜித் குற்றச்சாட்டு.

“ராஜபக்ச அரசின் முறையற்ற பொருளாதார முகாமைத்தும் நாட்டு மக்களை நெருக்கடி நிலைக்குள் தள்ளியுள்ளதுடன் மீண்டும் 1970 – 1977 ஆண்டுகளின் வரிசை யுகத்தை உருவாக்கியுள்ளது. பொதுமக்களின் பிரச்சினைக்கு இந்த அரசிடம் தீர்வு ஏதுமில்லை.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் அரச ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் அரசிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும்போதே இவ்வாறு குற்றஞ்சாட்டிய சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவிக்கையில்,

“அரசிடம் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் இல்லை. தோல்வியடைந்த பொருளாதார முகாமைத்துவமே மக்களை இந்தளவுக்கு பிரச்சினையில் தள்ளியுள்ளது. இப்போது எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விலைகளை அதிகரிக்கும் போது, ஓய்வு பெற்றவர்கள், அரச ஊழியர்கள், நாட்டு மக்கள் எவ்வாறு வாழ்வது என்று கேட்கின்றேன்.

இதேவேளை, தற்போது விவசாயிகள் உரம் இல்லாமல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பெருமையுடன் வாழ்ந்த விவசாயிகள் இன்று வறுமையால் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் 7 மூளையுடைய அமைச்சர் ஒருவர் அனைத்து பொருட்களினதும் விலைகளை குறைப்பார் என்றும் கடந்த காலங்களில் கூறினர். ஆனால், தற்போது அந்த 7 மூளைக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

இன்று எமது நாட்டில் வரிசை யுகம் ஒன்று உருவாகி உள்ளது. சீனி வரிசை உள்ளது. அரிசி வரிசை உள்ளது. எரிவாயு வரிசை உள்ளது. பால்மா வரிசை மற்றும் சீமெந்து வரிசை என்று வரிசைகள் உருவாகி வருகின்றன.

இப்போது மீண்டும் 1970 – 1977 யுகத்தை காணக்கூடியதாக உள்ளது. இதற்காகவா 69 இலட்சம் பேர் மக்கள் ஆணையை வழங்கினர். இந்த அரசுக்கு வேலை செய்ய முடியாது. விலைகளை அதிகரிக்க மட்டும்தான் முடியும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.