இலங்கை – இந்திய நட்புறவுக்குப் பாதிப்பின்றி மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு! – அரசு தெரிவிப்பு

“இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பான பிரச்சினையை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, இராஜதந்திர ரீதியில் தீர்த்துக்கொள்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.”

– இவ்வாறு அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில், அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மீனவர் பிரச்சினை தொடர்பில் இராஜதந்திர ரீதியில் இந்திய அரசுடன் இலங்கை அரசு தொடர்ச்சியாகப் பேசி வருகின்றது. ஆனால், துரதிஷ்டவசமாக இலங்கை – இந்திய கடல் எல்லைகள் அடையாளமிடப்படாத ஒன்றாக இருப்பதால், இந்திய மீனவர்கள் எமது கடலுக்குள் தெரிந்தோ தெரியாமலோ நுழைகின்றனர்.

எனினும், இந்த விடயத்தில் நாடுகளுக்கு இடையிலான நட்புறவுகளைப் பாதுகாத்து, இராஜதந்திர ரீதியில் செயற்பட்டே தீர்வுகாண வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.