கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,582 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 24.53 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 49.81 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,582 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 83,52,601 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 1,123 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 33 ஆயிரத்து 898 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 72,42,735 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 8,75,968 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் தொடர்ந்து உயரும் கொரோனா பலி எண்ணிக்கையால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மாஸ்கோவில் நாளை முதல் அடுத்த மாதம் 7ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்திகொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களும் 4 மாதங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் குளிர் காலம் தொடங்க உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.