கோவையில் வனப்பகுதியில் காட்டு யானையின் இறப்பும் தந்தம் கிடைத்த மர்மமும்.. மௌனம் சாதிக்கும் வனத்துறை

கோவை வனப்பகுதியில் உயிரிழந்த காட்டு யானையின் தந்தங்கள் மாயமானதாக கூறப்பட்ட நிலையில் தந்தங்கள் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது சமூக ஆர்வலர்கள் இடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

கோவை பூலுவம்பட்டி வனச்சரகம் பூண்டி வனப்பகுதியில் கடந்த 23 தேதி போளுவாம்பட்டி வனத்துறையினர் ரோந்து பணி சென்றபோது, இறந்த யானையின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எலும்புக்கூடுகளை கண்ட வனத் துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் குழுவுடன் அங்கு வந்த வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட போது, அந்த யானை இறந்து சுமார் 40 நாட்களுக்கு மேலே ஆகி இருக்கலாம் என்றும் இறந்த யானை பல் மற்றும் எலும்புகளை ஆய்வு செய்தபோது அந்த யானை சுமார் 25 முதல் 30 வயது வரை இருக்கக்கூடிய ஆண் யானை என கண்டறியப்பட்டது.

யானையின் எலும்புக்கூடுகள் இருந்த இடத்தில் யானையின் தந்தங்கள் மட்டும் மாயமானது தெரியவந்தது. அந்த தந்தங்கள் வெட்டி எடுக்கப்படவில்லை என்றும் இறந்த யானை நீண்ட நாள் ஆன நிலையில் அதன் தந்தங்கள் மர்மநபர்களால் உருவி எடுக்கப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் மாயமான தந்தங்களை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வனத்துறையினர் சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் தந்தம் கடத்தல் தொடர்பான நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அடர் வனப்பகுதிக்குள் யானையின் இரண்டு தந்தங்கள் முட்புதரில் மர்ம நபர்கள் மறைத்துவைத்து சென்றதாகவும் அந்த தந்தங்களை தற்போது வனத்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் வனத்துறை ஊழியர்கள் முறையாக ரோந்து செல்லாதே யானை உயிரிழப்பு நடந்ததை கூட கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதேபோல் மாயமானதாக கூறப்பட்ட யானை தந்தங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு எப்படி அதே வனப்பகுதிக்குள் கிடைத்தது. அந்த புதருக்குள் யானைத் தந்தங்கள் கிடப்பது போன்ற புகைப்படத்தை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். ஆனால் அந்த புதர்களில் வேண்டுமென்றே தற்காலிகமாக உருவாக்கப்பட்டது போல் உள்ளது, எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

தொடர்ந்து யானைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை கோவை வனத்துறையினர் எடுத்து வருவதாக கூறி வரும் நிலையில், இந்த யானையின் உயிரிழப்பும் மாயமான தந்தங்களும் தற்போது வனப் பகுதியிலேயே அந்த தந்தங்கள் கிடைக்கப் பெற்றதும் மிகப்பெரிய மர்மமாகவே உள்ளது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள வனத்துறை அமைச்சர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்ட குழுவை அமைப்பதன் மூலம் இனிவரும் காலங்களில் வன விலங்குகளையும், வனப் பகுதிகளையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.