சரவெடிக்கு தடை.. தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்சநீதிமன்றம் அதிரடி

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதேபோல், பட்டாசு வெடிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள இரண்டு மணி நேரத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வாதங்கள் நிறைவடைந்த நிலையில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், பேரியம் உப்புகளை பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிக்க தடை விதிக்கப்படுவதாகவும், தடை செய்யப்பட்ட வேதிப் பொருட்களை பயன்படுத்தி பசுமைப் பட்டாசுகள் என்ற பெயரில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

பட்டாசுகளை வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க மறுத்த நீதிபதிகள், 2017, 2018ம் ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

சரவெடி தயாரிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், ஆன்லைன் மூலமும் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது என தெரிவித்தனர். பட்டாசு தொடர்பான விதிகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்ட மாநில தலைமை செயலாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.