ஸ்கொட்லாந்து மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி புறப்பட்டார்…

ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து – க்லாஸ்கோவில் நடைபெறவுள்ள “COP: 26 ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம்” தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் இன்று (30) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டார்.

காலநிலை மாற்றம் மற்றும் அதற்கு முகங்கொடுத்து செயற்படுவதற்காக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்படும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, நாளை (31) தொடக்கம் நவம்பர் 12 வரை, க்லாஸ்கோ நகரில் நடைபெறும்.

நவம்பர் 01 மற்றும் 02ஆம் திகதிகள், உலகத் தலைவர்களின் மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

“காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தின் தீர்மானமிக்க சந்தர்ப்பங்கள்” என்று நடைபெறுகின்ற இம்மாநாட்டில், 197 நாடுகளின் அரச தலைவர்கள், அரச பிரதிநிதிகள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் இருபத்தையாயிரம் பேர் கலந்துகொள்ளவுள்ளனர். ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற மாநாடுகளில், இதுவே மிகப் பெரிய மாநாடாகக் கருதப்படுகிறது.

சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, சூரியசக்தி, காற்று மற்றும் நீர்மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க ஆகியோரும், ஜனாதிபதியுடன் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.