உலக கோப்பை கிரிக்கெட்: இன்று ‘சூப்பர்-12’ சுற்றில் இரண்டு ஆட்டங்கள்.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று ‘சூப்பர்-12’ சுற்றில் அபுதாபியில் இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன.

அபுதாபியில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-வங்காளதேச அணிகள் அணிகள் மோதுகின்றன.

தெம்பா பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி ‘சூப்பர்-12’ சுற்றின் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. அதன் பிறகு அடுத்த இரண்டு ஆட்டங்களில் வெஸ்ட்இண்டீஸ், இலங்கையை அடுத்தடுத்து வீழ்த்தி கம்பீரம் காட்டியது. பேட்டிங்கில் குயின்டான் டி காக், தெம்பா பவுமா, மார்க்ராம், வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் பிரிட்டோரியஸ், அன்ரிச் நோர்டியா, காஜிசோ ரபடா, தப்ரைஸ் ஷம்சி, கேஷவ் மகராஜ் ஆகியோர் மிரட்டி வருகிறார்கள்.

மக்முதுல்லா தலைமையிலான வங்காளதேச அணி இலங்கை, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக தோல்வியை தழுவி அரைஇறுதி வாய்ப்பை இழந்து கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மட்டுமின்றி பீல்டிங்கிலும் சொதப்பி வருகிறது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் விலகி இருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும். எல்லா துறையிலும் எழுச்சி பெற்றால் மட்டுமே வங்காளதேச அணியால் வலுவான தென்ஆப்பிரிக்க அணிக்கு ஈடுகொடுக்க முடியும்.

இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச 20 ஓவர் போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 6 முறையும் தென்ஆப்பிரிக்க அணியே வென்று இருக்கிறது. இன்றைய ஆட்டத்திலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அரைஇறுதி வாய்ப்பை வலுப்படுத்த தென்ஆப்பிரிக்க அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் வங்காளதேச அணி அச்சமின்றி விளையாடி அதிர்ச்சி அளிக்க முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி அறிமுக அணியான நமிபியாவை எதிர்கொள்கிறது.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்த உலக கோப்பையில் அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது. பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை பந்தாடியது. அடுத்த ஆட்டங்களில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது. பேட்டிங்கில் பாபர் அசாம், பஹர் ஜமான், முகமது ரிஸ்வான், சோயிப் மாலிக் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த ஆட்டத்தில் ஆசிப் அலி அதிரடியில் அசத்தினார். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, இமாத் வாசிம், ஹாரிஸ் ரவுப், ஷதப் கான் ஆகியோர் எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகிறார்கள்.

ஜெரார்டு எராஸ்மஸ் தலைமையிலான நமிபியா அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை தோற்கடித்தது. முந்தைய ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் பணிந்தது. 161 ரன் இலக்கை நோக்கி ஆடிய நமிபியா அணி 9 விக்கெட்டுக்கு 98 ரன்களே எடுத்து தோல்வி கண்டது. பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணி தொடர்ந்து 4-வது வெற்றியை ருசித்து அரைஇறுதியை உறுதி செய்யும் முனைப்புடன் களம் இறங்கும். அந்த அணியின் வெற்றிப்பயணத்துக்கு அணை போடுவது என்பது நமிபியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

Leave A Reply

Your email address will not be published.