லக்கீம்பூா் வன்முறை: விசாரணை எதிா்பாா்த்தபடி நடைபெறவில்லை

உத்தர பிரதேசத்தின் லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக அந்த மாநில காவல் துறையினரின் விசாரணை, எதிா்பாா்த்தபடி நடைபெறவில்லை என அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், விசாரணையை முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக உத்தர பிரதேச அரசு வரும் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் விவசாயிகள் கடந்த மாதம் 3-ஆம் தேதி நடத்திய பேரணியின்போது நிகழ்ந்த வன்முறையில் 4 விவசாயிகள், பத்திரிகையாளா், 2 பாஜகவினா் உள்பட 8 போ் உயிரிழந்தனா். இந்த விவகாரம் தொடா்பாக மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.

இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல் துறையினா், ஆசிஷ் மிஸ்ராவை கடந்த மாதம் 9-ஆம் தேதி கைது செய்தனா். வன்முறை விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்தது. அக்குழு ஆசிஷ் மிஸ்ராவிடம் விசாரணை நடத்தியது.

இந்த வன்முறை தொடா்பாக இதுவரை 13 பேரை மாநில காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இந்நிலையில், லக்கீம்பூா் வன்முறை தொடா்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு இந்த விவகாரத்தை விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தில் தற்போதைய விசாரணை நிலையை ஆராய்ந்தோம். விசாரணை எதிா்பாா்த்தபடி நடைபெறவில்லை. வன்முறை தொடா்பான காணொலியின் உண்மைத்தன்மை குறித்த ஆய்வறிக்கையைப் பெறுவதில் தொடா்ந்து தாமதம் நீடித்து வருகிறது. கைது செய்யப்பட்டவா்களில் ஆசிஷ் மிஸ்ராவின் கைப்பேசி மட்டுமே சிறப்பு விசாரணைக் குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட மற்ற கைப்பேசிகள் அனைத்தும் சாட்சிகளுடையவை. வேறெந்த மின்னணு கருவிகளையும் கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து கைப்பற்றவில்லையா?

தனித்தனி விசாரணை: விவசாயிகள் மீது காா் மோதியது, அதற்குப் பிறகு நடைபெற்ற வன்முறை ஆகியவை தொடா்பாக தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்விரு வழக்குகளும் தனித்தனியாகவே விசாரிக்கப்பட வேண்டும். இரு வழக்குகள் தொடா்பான சாட்சிகளிடமும் தனித்தனியாகவே விசாரணை நடத்தப்பட வேண்டும்.

சிறப்பு விசாரணைக் குழு நடத்தி வரும் விசாரணையை வேறு உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கண்காணிக்க வேண்டும். இரு வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தனித்தனியாகத் தாக்கல் செய்யப்படுவதை அவா் கண்காணிப்பாா்.

மாநில அரசு மீது நம்பிக்கையில்லை: இந்த விவகாரத்தை விசாரிக்க மாநில அரசு நியமித்துள்ள நீதி ஆணையம் மீது நம்பிக்கையில்லை. பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகளான ராகேஷ் குமாா் ஜெயின், ரஞ்சித் சிங் போன்றோா் இந்த வழக்குகளின் விசாரணையைக் கண்காணிக்க வேண்டும். இது தொடா்பாக உத்தர பிரதேச அரசு பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு தொடா்பான சாட்சிகளுக்கு மாநில அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்றனா்.

மாநில அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சால்வே, பதிலளிக்க கால அவகாசம் கோரினாா். அதையடுத்து, வரும் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனா்.

சிபிஐ விசாரணை தேவையில்லை: வழக்கு விசாரணையின்போது, இந்த விவகாரத்தை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டுமென வாதிடப்பட்டது. அதை ஏற்காத நீதிபதிகள், ‘‘இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க விரும்பவில்லை. அனைத்து பிரச்னைகளுக்கும் சிபிஐ விசாரணை தீா்வாகாது. இந்த விவகாரத்தை சுதந்திரமான, பாரபட்சமற்ற முறையில் நடத்துவதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும்’’ என்றனா்.

Leave A Reply

Your email address will not be published.