இந்தியாவின் முக்கியத்துவம் இப்போதே இலங்கைக்குப் புரிகின்றது! – கூட்டமைப்பிடம் தூதுவர் சுட்டிக்காட்டு

“சீனாவுக்குச் சார்பாக இலங்கை செயற்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியாவின் முக்கியத்துவம் அரசுக்கும் நாடாளுமன்றத்துக்கும் விளங்கியுள்ளது.”

இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் நேற்று மாலை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவை, கொழும்பிலுள்ள தூதுவர் இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர். இதன்போதே தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.

கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவரும், வெளிநாட்டுக்கான தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள காரணத்தால் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமும், உறவினரின் மரணவீட்டுக்குச் சென்ற காரணத்தால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கமும் நேற்றைய சந்திப்பில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் நேற்றைய சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

நேற்று மாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேச்சு சுமார் இரண்டு மணிநேரம் தொடர்ந்தது.

இந்திய – இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்க மாநாட்டு நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கு இடையிலான நாடாளுமன்ற தொடர்புகள் மற்றும் பரிமாற்றங்கள் உள்ளிட்ட துறைகளூடாக இரு நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நட்புறவு குறித்தும், வழமைக்கு மாறாக இந்த நிகழ்வில் ஆளும் – எதிர்த்தரப்பு சார்ந்து நூற்றுக்கும் அதிமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறித்தும் இந்தியத் தூதுவர் கூட்டமைப்பிடம் தனிப்பட்ட சில காரணிகளை எடுத்துக்கூறினார்.

குறிப்பாக இதற்கு முன்னர் இந்த நிகழ்வுகளில் மிகக் குறைவான உறுப்பினர்கள் கலந்துகொண்ட நிலையில் இம்முறை அந்த நிலைப்பாடு முழுமையாக மாறியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்குச் சார்பாக இலங்கை செயற்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியாவின் முக்கியத்துவம் அரசுக்கும் நாடாளுமன்றத்துக்கும் விளங்கியுள்ளமை வெளிப்பட்டுள்ளது என இந்தியத் தூதுவர், சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சுட்டிக்காட்டினார்.

மேலும், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் வடக்கு, கிழக்குக்கு அவசியமான முன்மொழிவுகள் குறித்தும், மாவட்ட ரீதியிலான தனித்தனியான துரித அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் நீண்டகால அபிவிருத்தி நலத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

இந்திய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட முக்கிய காரணிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. இந்திய – இலங்கை மக்களுக்கு இடையிலான தொடர்பாடல், இராமேஸ்வரம் படகு சேவை, பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை அபிவிருத்தி குறித்தும் முக்கியத்துவம் கொடுத்து இதன்போது பேசப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.