தங்க நகை வியாபாரியிடம் கொள்ளை.. ஊழியர் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச் – கொள்ளையர்களை பிடித்த போலீஸ்
கோவை வடவள்ளி அருகே தங்கநகை வியாபாரியிடம் 2 கிலோ தங்கம், மற்றும் 7 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்த போலீசார் நகை, பணம் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சண்முகம். இவர் அங்கு உள்ள தங்க நகை கடைகளில் இருந்து தங்கத்தை பெற்று ஹால் மார்க் நகைகளாக மாற்றி கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி சண்முகம் ஹால் மார்க் செய்த நகை மற்றும் பணத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது. மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சண்முகத்தை தாக்கி 2 கிலோ தங்க நகை, 7 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் வடவள்ளி போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். அப்போது வழக்கில் தொடர்புடைய பவானி சிங், அப்துல் ஹக்கீம், அஷ்ரப் அலி, உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். இந்நிலையில் கேரளா, கர்நாடக மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் பாஷா, சம்சுதீன், அன்பரசன் ஆகிய மூன்று பேரை போலிசார் கைது செய்து அவர்களிடமிருந்த 212 சவரன் தங்க நகைகள், 5.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
முதல் கட்ட விசாரணையில் சண்முகம் ஹால்மார்க் செய்ய நகைகளை கொடுக்கும் கடையில் வேலை பார்த்து வந்த பவானி சிங், கோவை குண்டு வெடிப்பு குற்றவாளியான பாஜா என்கிற சிக்கந்தர் பாஷாவுடன் திட்டம் தீட்டி சண்முகத்திடம் நகை, பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.
இது குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் கூறும் போது, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பாஷா இப்போது காய்கறி கடை வைத்திருப்பதாகவும், பவானி சிங் கொடுத்த தகவல் அடிப்படையில் திட்டமிட்டு கொள்ளையை அறங்கேற்றியது தெரியவந்தது. மேலும் அதிக பணம் நகைகளை எடுத்துச் செல்லும் வியாபாரிகள் போதிய பாதுகாப்பு இல்லாமல் இரு சக்கர வாகனங்களில் எடுத்து செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். தனிப்படை போலீசார் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று திறமையாக கையாண்டு 10 பேரை கைது செய்துள்ளனர், மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர் என தெரிவித்தார். சிறப்பாக பணியாற்றி காவலர்களுக்கு ஐ.ஜி சுதாகர் பரிசு வழங்கி பாராட்டினார்.