ஆரணி அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை – சாவில் மர்மம் உறவினர்கள் புகார்

ஆரணி அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்தவர் ராணி சகுந்தலா. இவரின் மகள் ஷர்மிளா(22). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி அருகே உள்ள அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பார்த்தீபன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு லிங்கேஸ்வரன் என்ற மகனும் (2) லிதிஷா (2) என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஷர்மிளாவின் அண்ணன் சார்லஸ் என்பவருக்கு செல்போன் மூலம் பார்த்தீபனின் உறவினர் தொடர்பு கொண்டு தன்னுடைய தங்கையை பார்க்க அழைத்துள்ளார். இதனையடுத்து சார்லஸ் மற்றும் ஷர்மிளா தாயார் ராணி சகுந்தலா ஆகியோர் அக்ராபாளையம் கிராமத்திற்கு சென்ற போது ஷர்மிளா வீட்டில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து பார்த்தீபன் மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்ட போது சரிவர பதிலக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக ராணி சகுந்தலா மற்றும் உறவினர்கள் ஒன்றிணைந்து ஆரணி கிராமிய காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பின்னர் பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மனு அளித்தனர். இச்சம்பவம் குறித்து ஆரணி கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து ஷர்மிளாவின் கணவர் பார்த்தீபனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உரிய நடவடிக்கை எடுக்கும் வரையில் ஷர்மிளாவின் சடலத்தை வாங்க மாட்டோம் என்று பெண்ணின் உறவினர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.