குழந்தைப் பருவம் என்பது மிக சரியான முறையில் பக்குவமாக வழிகாட்டவேண்டும்.

குழந்தைப் பருவம் என்பது மிக சரியான முறையில் பக்குவமாக வழிகாட்ட கூடிய மிக முக்கிய பருவமாக அமைகிறது. இப்பருவத்தில் உறுதியான மார்க்கக் கல்வியை புகட்டுவது அவசியமாகும். இதன் மூலம்தான் எதிர்கால சந்ததியினர்களை நாட்டின் நல்லொழுக்கமுள்ள நற்பிரஜகளாக உருவாக்க முடியும் என்று அக்குறணை அஸ்னா ஜும்ஆப் பள்ளிவாசலின் பொதுத் தலைவர் சட்டத்தரண அஸ்மி பாரூக் தெரிவித்தார்.

அக்குறணை அல் பலாஹ் நிதி நிறுவனத்தின் அனுசரணையுடன் அக்குறணை அஸ்னா ஜும்ஆப் பள்ளிவாசலின் கீழ் இயங்குகின்ற அஸ்னா குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான மீலாத் விழாப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா பள்ளிவாசலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தலைமையுரை நிகழ்த்திய அக்குறணை அஸ்னா ஜும்ஆப் பள்ளிவாசலின் பொதுத் தலைவர் சட்டத்தரணி அஸ்மி பாரூக் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
இந்நிழ்வில் பிரதம அதிதியாக அக்குறணை அல் பலாஹ் நிதி நிறுவனத்தின் பொது முகாமையாளர் தில்பௌசி முஸ்லிம் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் சேமிப்பு பணப் புத்தகங்களையும் வழங்கி வைத்தார். பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள் , அல் பலாஹ் உத்தியோகஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அவர் தொடர்ந்து உரையாற்றும் போது
கொரோனாவினால் நாடு முற்றாக முடக்கப்பட்டு சுய தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்ப்பட்ட போதிலும் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுடைய கல்வி நடவடிக்கை இடை நிறுத்தப்பட வில்லை. அக்கால கட்டங்களிலும் மத்ரஸா மாணவர்களுடைய கல்வி நடவடிக்கை சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டன. கொரோனாவின் நெருக்கடியான சூழலில் பிள்ளைகளுக்கு பாடங்களையும் போட்டிகளையும் நடத்தி அதில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு பரிசளிப்பு நடத்துவது என்பது வரவேற்கத்தக்க அம்சமாகும். ஒரு இக்கெட்டான காலமாக இருந்தாலும் அக்காலத்தை நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டு அவர்களுக்கு நல்ல வழிகளைக் காட்டியுள்ளார்கள். அவர்கள் கற்ற கல்வி தான் சாந்த சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

நாங்கள் உலகக் கல்வியை பிள்ளைகளுக்கு வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றோம். மார்க்க விடயம் எனும் போது உலகக் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட மிகக் குறைவாகவே வழங்குகின்றோம். ஒரு நல்ல ஒழுக்கப் பண்பாடுமிக்க பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்கு ஒவ்வொரு பெற்றோர்களும் பொறுப்புள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.

குர்ஆன் மத்ரஸாக் கல்வி என்பது தம் நாட்டுக்கும் உலகிற்கும் தம் சமூகத்திற்கும் நல்ல பிரஜைகளை உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயேதான் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் மார்க்கக் கல்வியான குர்ஆன் மத்ரஸாக் கல்விக்கு முக்கியத்துவம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. பெற்றோர்கள் உலக கல்விக்கு முக்கியத்தும் கொடுப்பதிலேயே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இது சமூகத்திற்கு பெரும் அழிவையும் நாசத்தை விளைவித்து விடும்.

உலகக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் பிள்ளைகளை மிகச் சிரமங்களை தாங்கிக் கொண்டு பாடசாலைகளுக்கு அனுப்புகின்றோம். அதற்காக கூடுதலாக பணம் செலவு செய்கின்றோம். கூடுதலாக கரிசனை காட்டுகின்றோம்.

எவ்வாறாயினும் எப்படித்தான் உயர் பதவிகள் இருந்தாலும் உயர்ந்தளவுக்கு பணச் செல்வாக்கு இருந்தாலும் ஒழுங்கான பழக்க வழக்கங்கள் இல்லா விட்டால் யாரும் கவனத்தில் கொள்ளமாட்டார்கள். மார்க்கக் கல்வியிருந்தால் மாத்திரம்தான் ஒழுக்க மாண்புகள் தானாக வரும். அத்திவாரம் உறுதியாக இல்லா விட்டால் அந்த கட்டடிடத்திற்கு பலம் இல்லாமற் போய் விடும். எமது சிறிய பிள்ளைகளுக்குரிய மத்ரஸா கல்வியை நாங்கள் பலமிக்கதாக வழங்க வேண்டும்.

இந்த சிறிய பிள்ளைகள் தான் எதிர்காலத்தில் அக்குறணையை வழி நடத்தக் கூடிய பிள்ளைகள். அத்தோடு அவர்கள் அந்நிய சமூகத்துடன் மிக நெருக்கமான உறவைப் பேணி நாட்டையும் நாட்டு மக்களையும் கட்டி எழுப்பக் கூடிய தலைசிறந்த இந்த நாட்டின் நற் பிரஜைகளாக உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.