பஸ் சாரதிகளுக்கு விரைவில் இரண்டு வாரப் பயிற்சி….

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வீதி விபத்துக்களை குறைத்துக்கொள்ளும் நோக்கில் வீதி ஒழுக்கம் தொடர்பில் சாரதிகளுக்கு விசேட பயிற்சி வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை மேற்கொள்வதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தலைமையில் இடம்பெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் புலப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை இடம்பெற்ற வீதி விபத்துக்கள் காரணமாக 1948 உயிர்களை இழந்திருப்பதாவும், கடந்த 10 வருடங்களில் சுமார் 27000 இறந்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் சரத் வீரசேகர, வீதி ஒழுங்குகளை பாதுகாக்கும் வகையில் இலங்கை பொலிஸ் உள்ளிட்ட நிறுவங்களின் பங்களிப்பில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார். தண்டப்பணம் செலுத்தும் முறையில் காணப்படும் குறைபாடுகளை தவிர்த்துக்கொள்ள உடனடியாக தண்டப்பணம் செலுத்தும் முறை மற்றும் சாரதி மதிப்பெண் முறையை விரைவில் அறிமுகப்படுத்துவதாகவும், இதற்கான துரித வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு சாரதிகளின் ஒழுக்கமின்மை பிரதான காரணமென்றாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், இந்நிலையை தவிர்ப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றின் தேவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களால் குழுவில் முன்வைக்கப்பட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் மற்றும் சமூகப் பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, வீதி ஒழுங்குகள் தொடர்பில் சாரதிகளை விழிப்பூட்டும் நிகழ்ச்சியொன்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிலவும் கொவிட் சூழலில் அது தாமதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அதற்கமைய அதன் முதற்படியாக மாகாணங்களுக்கிடையிலான பஸ் சாரதிகளுக்கு இரண்டு வார பயிற்சியை விரைவில் ஆரம்பிப்பதாகவும் திலும் அமுனுகம தெரிவித்தார். இதுவரை மாகாணங்களுக்கிடையிலான பஸ் சரதிகள் சுமார் 17,000 பேர் சேவையாற்றுவதாகவும், அடிக்கடி இடம்பெறும் பஸ் விபத்துக்கள் தொடர்பில் அவர்களின் ஒழுக்கத்தை பேணுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தொழிற்சங்க நடவடிக்கைகளோ ஆர்ப்பாட்டங்களோ இன்றி மிகக் கடினமான நிலையில் பணியாற்றும் இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் வழங்குவதன் அவசியம் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். கடந்த கொவிட் நிலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 15,700 பேர் பாதிக்கப்பட்டதுடன், 44 பேர் உயிரிழந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுப்பது தொடர்பில் தனது நன்றியை தெரிவித்தார்.

குற்றச்செயல்கள் தொடர்பில் ஊடகங்களில் அறிக்கையிடும் போது பொலிஸார் மிகவும் பொறுப்புடன் செயற்படவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவது சிக்கலானது என்பதால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.