அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் 71 ஆவது வருடாந்த மாநாடு.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் 71 ஆவது வருடாந்த மாநாடும் பொதுக் கூட்டமும், இலங்கை மன்றக் கல்லூரியில், இம்மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை பி.ப. 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி தலைமையில் இடம்பெறும் இச்சிறப்பு நிகழ்வில், நீதி அமைச்சர் அலி சப்ரி பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவைப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.ஜே.எப். ரினோசியா, நிகழ்வில் சிறப்பதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.

நாடளாவிய ரீதியில், ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள மேலும் 25 புதிய கிளைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இப்புதிய கிளைகளை வை.எம்.எம்.ஏ. பேரவையுடன் கூட்டு சேர்க்கும் சிறப்பு நிகழ்வும் அன்றைய மாநாட்டின்போது இடம்பெறவுள்ளதாக, தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி தெரிவித்தார்.

இம்மாநாட்டில், நாடளாவிய ரீதியில் உள்ள கிளை உறுப்பினர்களுக்கிடையில் தேசிய மட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கிளை உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் தேசியத் தலைவர் குறிப்பிட்டார்.

வை.எம்.எம்.ஏ. யாப்பின் பிரகாரம், வழமையாக வருடாந்த மாநாடும் பொதுக் கூட்டமும், ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்திலேயே இடம்பெறுகிறது.

எனினும், கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இம்முறை ஒத்தி வைக்கப்பட்டு, ஏற்கனவே “ஸூம்” (Zoom) ஊடாக நிர்வாகத் தெரிவு இடம்பெற்ற நிலையில், இதில் தேசியத் தலைவரும் செயலாளரும் போட்டியின்றி ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டதாகவும் தேசியத் தலைவர் குறிப்பிட்டுக் காட்டினார்.

ஆனாலும், ஏனைய பொது நிர்வாகத் தெரிவுகள் இம்மாநாட்டின் இறுதியில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த மாநாட்டின் போது, நாட்டுக்கும் சமூகத்திற்கும் அளப்பரிய சேவைகளைப் புரிந்த ஒரு தனி மனிதரை அல்லது ஒரு அமைப்பைத் தெரிவு செய்து, “வை – பெனசலிட்டு” என்ற தேசிய விருது வழங்கிக் கௌரவிப்பது வழக்கமாகவிருப்பதால், குறித்த தேசிய விருதை இவ்வருடம் பெறுவதற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்விருதினை ஓட்டமாவடி பிரதேச தவிசாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர்கள் இணைந்து பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் தேசியத் தலைவர் குறிப்பிட்டார்.

இது தவிர, வை.டப்ளியூ.
எம்.ஏ. இன் பெண்கள் அமைப்பின் தலைவி பவாஸா தாஹா, இம்மாநாட்டில் விசேட விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்படவுள்ளதாகவும், வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.