தமிழகத்தில் டிசம்பர் 3 வரை பாஜக தொடர் போராட்டம் – அண்ணாமலை அறிவிப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது.

இதேபோல் தமிழ்நாடு அரசும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கக் கோரி, பாஜக சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போராட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அதன் விலையை 60 ரூபாய்க்கு கொண்டுவர முடியும் என தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிப்படி பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய் வரை திமுக அரசு குறைக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.

அரியலூரில் பேரறிஞர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், மத்திய அரசை போல் தமிழ்நாடு அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதேபோல், காஞ்சிபுரம், திருச்சி, சேலம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருச்செங்கோடு, மயிலாடுதுறை உள்ளிட்ட பல இடங்களிலும் பாஜகவினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சென்னையில்  பேட்டியளித்த மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் மத்திய அரசு 23 லட்சம் கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகவும், இதில் மாநில அரசின் பங்கு மிகக் குறைவு என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் வளருவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக, பாஜக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

Leave A Reply

Your email address will not be published.