காஸ் சிலிண்டர்கள் போன்று இந்த அரசும் விரைவில் வெடித்துச் சிதறும்!

நாட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறுவதைப் போன்று இந்த அரசும் விரைவில் வெடித்துச் சிதறும் என்று தெரிவித்த முன்னாள் காணி அமைச்சரும் தற்போதையாய் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியுமான கயந்த கருணாதிலக, வடக்கு, கிழக்கில் 75 ஆண்டுகளாக அந்த மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அரசு வெடித்துச் சிதறுவதற்குள் அதனைத் தீர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பெருந்தோட்ட அமைச்சு, காணி அமைச்சு மற்றும் 3 இராஜாங்க அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் பேசுகையில்,

“வடக்கு, கிழக்கில் இளைஞர்களையும் தேசிய விவசாயத்துறையில் இணைத்துக்கொள்ள – அவர்களுக்குத் தேவையான நிலத்தைப் பெற்றுக்கொடுக்க மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளதாக காணி அமைச்சர் அண்மையில் கூறினார். வடக்கு, கிழக்கில் 40 கிராமங்களுக்கு அதிகமான பகுதிகளில் 75 ஆண்டுகளாக அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை நாமும் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தேன். அதேபோல் அவர்களின் காணிகளுக்கான உறுதிப்பத்திரத்தை அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களின் நிலங்களை சட்ட ரீதியாகப் பெற்றுக்கொடுக்க வேண்டும். எனினும், சட்ட ரீதியில் பல இழுத்தடிப்புகள் இடம்பெறுவதால் அவர்களுக்கு உரிய நிலம் வழங்கப்படாது, நிலம் பாவிக்கப்படாது கைவிடப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

தேசிய காணி கொள்கை ஒன்றை உருவாக்கி சகல காணிப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டம் இந்த அரசிடம் உள்ளதா என்ற கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது.

நான் காணி அமைச்சராக இருந்த காலத்தில் பல வேலைத்திட்டங்களைக் கொண்டு வந்தேன். அதேபோல் காணி சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டு வந்தோம். சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்தபோதும் ஆட்சி மாற்றத்துடன் அவை நிறுத்தப்பட்டுவிட்டன . மக்களின் காணிப் பிரச்சினைக்கு முறையான தீர்வுகளை வழங்குங்கள். யார் ஆட்சியில் இருந்தாலும் மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வுகளை வழங்க வேண்டும். அதனையே நாமும் எதிர்பார்க்கின்றோம்.

அதேபோல் மலையக மக்கள் பாரிய நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். இதற்கு அரசின் முட்டாள்தனமான தீர்மானங்களே காரணம். மலையகத் தேயிலைத் தோட்டங்களைத் தனியார் மயப்படுத்தி, நிறுவனங்களுக்கு வேறு காரணிகளுக்காக விற்கும் நடவடிக்கை காரணமாக மலையகத்தைச் சார்ந்த எமது மக்கள் துன்பப்படுகின்றனர். சிறு தேயிலைத் தோட்டங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அடுத்த ஆண்டில் பாரிய நெருக்கடி நிலையொன்று நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படும்.

காஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறுவதை போன்று இந்த அரசும் வெடிக்கும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு நாளும் காலையில் அரசுக்குள் ஏற்பட்டு வரும் வெடிப்பைப் பார்க்கையில் அவ்வாறே நினைக்கத் தோன்றுகின்றது. இன்னும் குறுகிய காலமே இந்த அரசு இருக்கப்போகின்றது. அதற்குள் மக்களின் காணிப் பிரச்சினைகளை இந்த அரசு தீர்க்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.