அமெரிக்காவுக்கான இலங்கையின் நியமனம் செய்யப்பட்ட தூதுவராக மஹிந்த சமரசிங்க.

அமெரிக்காவுக்கான இலங்கையின் நியமனம் செய்யப்பட்ட தூதுவர் மஹிந்த சமரசிங்க 2021 டிசம்பர் 02ஆந் திகதி வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தை வந்தடைந்த நியமனம் செய்யப்பட்ட தூதுவர் சமரசிங்கவை ஊழியர்கள் வரவேற்று உபசரித்தனர். தூதுவர் மற்றும் ஏனைய பணியாளர்களினால் சம்பிரதாயபூர்வமாக மங்கள விளக்கை ஏற்றிவைத்து ஆரம்பமான எளிமையான வைபவத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய நியமனம் செய்யப்பட்ட தூதுவர் சமரசிங்க, ஊழியர்களின் அன்பான வரவேற்புக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், தனது பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மேலும் பலப்படுத்தப்பட்டு, ஆர்வமுள்ள அனைத்து துறைகளையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான இலங்கையின் உறவு பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்கதாகும் எனக் குறிப்பிட்ட நியமனம் செய்யப்பட்ட தூதுவர் சமரசிங்க, அமெரிக்காவில் இலங்கையின் நற்பெயரையும் நலன்களையும் ஊக்குவிப்பதில் இலங்கை சமூகத்தை எப்போதும் ஈடுபாட்டுடன் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் அனைத்து ஊழியர்களும் தமது முயற்சிகளை அதிகரித்து, அர்ப்பணிப்புடன் தமது தாய்நாட்டிற்கு சேவை செய்ய தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மெல்பேர்னிலுள்ள லா ட்ரோப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளமாணிப் பட்டத்தை (ஹொனர்ஸ்) பெற்றதன் பின்னர், நியமனம் செய்யப்பட்ட தூதுவர் சமரசிங்க இலங்கை வெளிநாட்டு சேவையில் அவுஸ்திரேலியாவின் கன்பராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் முதல் செயலாளராகவும், பின்னர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரத் தூதுக்குழுவின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

நியமனம் செய்யப்பட்ட தூதுவர் சமரசிங்க தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும், களுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை தேர்தல் தொகுதிக்கான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான அமைப்பாளராகவும் செயற்பட்டார். நியமனம் செய்யப்பட்ட தூதுவர் சமரசிங்க தேசிய சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமை கொறடா மற்றும் அரசாங்க தலைமை கொறடா உட்பட முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

சர்வதேச அரங்கில், பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமைகள் குழுவின் தலைவராகவும் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் மற்றும் உலக வானிலை அமைப்பு உட்பட பல்வேறு சர்வதேச மன்றங்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களில் நியமனம் செய்யப்பட்ட தூதுவர் மஹிந்த சமரசிங்க இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், 2008 மற்றும் 2012 இல் இலங்கையின் உலகளாவிய காலாந்திர மீளாய்வுகளை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டமை உட்பட, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் பலதரப்பு அமைப்பின் விஷேட மற்றும் வழக்கமான அமர்வுகளுக்கு (2006 முதல் 2014 வரை) இலங்கையின் தூதுக்குழுவை வழிநடாத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.