நீதிமன்றத்தை அவமதித்த ஞானசாரர் தலைமையில் செயலணி தேவைதானா?

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் செயற்பாடுகள் பிரச்சினைக்குரியன என்றும், அவரால் அச்சுறுத்தல் விடுப்பதைப் போன்று வெளியாகியுள்ள குரல் பதிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தற்போது ஒரே நாடு – ஒரே சட்டத்துக்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக செயலணி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2018 ஒக்டோபர் மாதத்தில் அரசமைப்பை மீறி சூழ்ச்சிகள் மூலம் அப்போது இருந்த அரசைக் கவிழ்த்தனர். இந்நிலையில், இந்தச் செயலணிக்குத் தகுதியில்லாதவர்களை நியமித்து நீதிமன்றத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்கியுள்ளனர்.

ஒரே நாடு ஒரே சட்டத்தை அமைப்பதற்கான செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேரர் நீதிமன்றத்தை அவமதிப்பு குற்றச்சாட்டிலும் மற்றும் அமைதியின்மையான வகையிலும் நடந்துகொண்டமையால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஜனாதிபதியால் விடுதலை செய்யப்பட்டவராவார்.

இந்தச் செயலணி தொடர்பில் எவ்வாறான நிலைப்பாடு இருந்தாலும் அதற்கு நியமிக்கப்பட்டுள்ள தேரர் தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியாது. இவர் தொடர்பில் பல்வேறு குரல் பதிவுகள் வெளியாகியுள்ளன.

இந்தச் சபையில் இருக்கும் பௌத்த எம்.பிக்கள் அனைவரும் என்னுடன் இணங்குவர் என்று நினைக்கின்றேன். இது பௌத்த தர்மத்தைப் பின்பற்றுவோருக்குப் பெரும் குழப்பமாக இருக்கின்றது. இவர் அச்சுறுத்தல்களை விடுக்கின்றார்.

நாங்கள் பௌத்தர்கள் என்ற ரீதியில் அனைத்து எம்.பிக்களும் வேறு மதத்தவர்களும் இந்த விடயத்தில் என்னுடன் இணங்குவர். தேரர்களின் உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த குரல் பதிவு சர்வதேசத்துக்குச் செல்லும் நிலையில் இருக்கின்றது. இது தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கை என்ன? தமது மதத்தின் பிக்குகளுக்கே இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருக்கையில் மற்றைய மதத்தைச் சேர்ந்தோரின் நிலை என்னவாக இருக்கும்.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மத்திய கிழக்குத் தூதுவர்களை அழைத்து தனிப்பட்ட சட்டங்களுக்குப் பாதிப்பு இல்லாதவாறே ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ நடக்கும் என்று கூறியுள்ளார். அவ்வாறு தனிப்பட்ட சட்டத்துக்கானது அல்லவென்றால் எதற்காக இந்தச் செயலணியை நியமிக்க வேண்டும்?

எவ்வாறான விடயங்களை முன்னெடுத்தாலும் நீதி அமைச்சரே அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அமைச்சரும், அமைச்சின் அதிகாரிகளும் சட்ட திருத்தங்களுக்காகப் பங்களிக்கின்றனர். இதனால் அனைவரினதும் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்கின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.