திருடப்பட்ட மாரடோனாவின் கைக்கடிகாரம்; இந்தியாவில் மீட்கப்பட்டது எப்படி?

கால்பந்து ஜாம்பவனான மாரடோனா, பல விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அணிவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதோபோல, மாரடோனா பிங் பாங் குரோனோகிராப் என்ற லிமிடெட் எடிஷன் கைக்கடிகாரத்தையும் வைத்திருந்தார். ஓய்வுபெற்ற பிறகு, கடந்த 2010 உலகக் கோப்பை சமயத்தில் கூட இந்த கைக்கடிகாரத்தை அவர் அணிந்திருந்தார்.

மாரடோனா மறைவுக்கு பிறகு, துபாயில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்த கைக்கடிகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனது. துபாய் காவல்துறையினர், இதை கண்டுபிடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த கைக்கடிகாரம், அசாம் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

துபாயிலிருந்து சமீபத்தில் இந்தியா திரும்பிய நபரின் வீட்டிலிருந்து இந்த கைக்கடிகாரம் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்விட்டரில், “துபாய் காவல்துறையுடன் இணைந்து பணியாற்றிய அசாம் போலீசார் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மறைந்த டிகோ மாரடோனாவுக்கு சொந்தமான கைக்கடிகாரத்தை மீட்டுள்ளது.

இது தொடர்பாக வாஜித் ஹுசைன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

துபாயில் மாரடோனாவின் உடைமைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனத்தில் வாஜித் ஹுசையன் காவலாளியாக பணியாற்றி வந்தார். அப்போது அங்கிருந்து மாரடோனாவின் கைக்கடிகாரத்தை திருடிய வாஜித் ஹுசையன், கடந்த ஆகஸ்ட் மாதம், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி இந்தியா திரும்பியுள்ளார்.

இந்தியா வந்த பிறகு, அவர் மீண்டும் செளதி திரும்பவில்லை. இது தொடர்பாக அந்த தனியார் நிறுவனம் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவர் சரியாகப் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அசாம் காவல்துறை தலைவர் பாஸ்கர் ஜோதி மஹந்தா கூறுகையில், “இந்த கடிகாரம் அர்ஜெண்டினா கால்பந்து வீரருக்கே சொந்தமானது, இது துபாயில் மற்ற அரிய பொருள்களுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. துபாய் காவல்துறை மத்திய முகமை மூலம் எங்களுக்கு அளித்த தகவலின் படி, ஹுசைன் என்பவர் மாரடோனா கையெழுத்திட்ட ஹூப்லாட் கடிகாரத்தைத் திருடிவிட்டு அசாமுக்கு வந்தது தெரியவந்தது.

இன்று அதிகாலை 4 மணியளவில் சிப்சாகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து வாஜித் ஹுசைனை கைது செய்தோம். அவரிடமிருந்து கடிகாரமும் மீட்கப்பட்டது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.