உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயினில் இன்று தொடங்குகிறது.

ஒலிம்பிக் விளையாட்டு நடக்கும் ஆண்டை தவிர்த்து மற்ற வருடங்களில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள வெல்வா நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.

ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இந்த போட்டியில் இருந்து இந்தோனேஷியா வீரர், வீராங்கனைகள் எல்லோரும் விலகி விட்டனர். அத்துடன் 2 முறை சாம்பியனான ஜப்பான் வீரர் கென்டோ மோமோட்டா, பெண்கள் பிரிவில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட 3 முறை உலக சாம்பியனான உள்ளூர் நட்சத்திரம் கரோலினா மரின், 2017-ம் ஆண்டு சாம்பியனான நஜோமி ஒகுஹரா (ஜப்பான்), இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் 26 வயது பி.வி.சிந்து களம் இறங்குகிறார். சமீபத்தில் நடந்த உலக டூர் இறுதி சுற்று போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து முன்னதாக நடந்த பிரெஞ்ச் ஓபன், இந்தோனேஷியா மாஸ்டர்ஸ், இந்தோனேஷியா ஓபன் ஆகியவற்றில் அரைஇறுதி வரை முன்னேறினார். இந்த ஆண்டில் மகுடம் சூடாத குறையை இந்த போட்டியின் மூலம் சிந்து தீர்ப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முன்னணி வீராங்கனைகள் விலகி இருப்பதால் சிந்து சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க நல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ், இந்தோனேஷியா ஓபன், உலக டூர் இறுதி சுற்று போட்டிகளில் தொடர்ச்சியாக பட்டம் வென்று சூப்பர் பார்மில் இருக்கும் அன் செயோங் (தென்கொரியா) மற்றும் தாய் சூ யிங் (சீன தைபே), போர்ன்பவீ சோச்சுவாங் (தாய்லாந்து), ராட்சனோக் இன்டானோன் (தாய்லாந்து) ஆகியோரும் பட்டத்துக்கான வாய்ப்பில் வலுவாக இருப்பதால் சிந்துவுக்கு கடும் சவால் காத்து இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. முதல் சுற்றில் ‘பை’ சலுகை பெற்று நேரடியாக 2-வது சுற்றில் அடியெடுத்து வைக்கும் சிந்து தனது முதல் மோதலில் மார்ட்டினா ரெபிகாவை (சுலோவக்கியா) சந்திக்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்களது முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், ஸ்பெயினின் பாப்லோ அபியனையும், சாய் பிரனீத், நெதர்லாந்தின் மார்க் கால்ஜோவ்வையும், பிரனாய், ஹாங்காங்கின் கா லாங்கையும் எதிர்கொள்கிறார்கள். இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென்னுடன் முதல் சுற்றில் மோத இருந்த வீரர் விலகி விட்டார். இதனால் லக்‌ஷயா சென் நேரடியாக 2-வது சுற்றில் விளையாட உள்ளார். இதில் ஒலிம்பிக் சாம்பியன் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்), ஆன்டர்ஸ் அன்டோன்சென் (டென்மார்க்), லீ ஸி ஜியா (மலேசியா) ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.