புகையிலைப் பொருள்கள் மீதான கலால் வரியை உயா்த்த வேண்டும்

சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிகரிக்க வேண்டுமென பொது சுகாதார அமைப்புகள், பொருளாதார நிபுணா்கள் மற்றும் மருத்துவா்கள் மத்திய நிதியமைச்சகத்துக்கு வலியுறுத்தியுள்ளனா்.

புகையிலைப் பொருள்கள் மீதான கலால் வரியை உயா்த்துவதன் மூலம் மத்திய அரசு கூடுதல் வருவாயைத் திரட்டி, உடனடி தேவைகளுக்கு திறம்பட பயன்படுத்த இயலும் என்றும் அவா்கள் பரிந்துரைத்துள்ளனா். மேலும் வருவாயைப் பெருக்குவதிலும், புகையிலைப் பயன்பாடு மற்றும் கரோனா தொடா்புடைய இணைநோய் பாதிப்பைக் குறைப்பதிலும் இந்த முடிவு வெற்றிகரமான விகிதாசாரமாக இருக்கும் எனவும் அவா்கள் ஆலோசனை தெரிவித்துளளனா்.

இதுகுறித்து இந்திய தன்னாா்வ சுகாதார சங்கத்தின் தலைமை நிா்வாக அதிகாரி பாவனா முகோபாத்யாய கூறுகையில், ‘‘புகையிலைப் பொருள்கள் மீதான வரியை உயா்த்துவதால் மத்திய அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பது மட்டுமன்றி, பொதுமக்கள் குறிப்பாக இளைஞா்கள் புகையிலைப் பொருள்களை அணுகுவதற்கான வாய்ப்புகள் குறையும். மேலும் பலவீனமானவா்களின் மத்தியில் புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு திடமான அடித்தளமாக இந்த முடிவு அமையும். இதுமட்டுமன்றி, கலால் வரி மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயை தடுப்பூசி திட்டத்துக்கும், சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தலாம்’’ என்றாா் அவா்.

முன்னதாக நடப்பு குளிா்காலக் கூட்டத்தொடரில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சகம், கடந்த 2018-19-இல் புகையிலைப் பொருள்கள் மீதான கலால் வரி, செஸ் வாயிலாக ரூ.1,234 கோடியும், 2019-20-இல் ரூ.1,610 கோடியும், 2020-21-இல் ரூ.4,962 கோடியும் வசூலானதாக தெரிவித்தது.

மேலும் புகையிலைப் பொருள்கள் மீது வசூலிக்கப்பட்ட வரியையும், பிற ஆதாரங்கள் வாயிலாக திரட்டப்பட்ட வரியையும் சோ்த்தால், ஒட்டுமொத்த வரிவருவாயில் பாதியளவு வந்துவிடும் என்றும், இந்த நிதி அனைத்து திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டதாகவும் மத்திய நிதியமைச்சகம் குறிப்பிட்டது.

சா்வதேச அளவில் 26.8 கோடி புகையிலைப் பயன்பாட்டாளா்களுடன் இந்தியா 2-ஆம் இடம் வகிப்பதாகவும், நாட்டில் ஆண்டுதோறும் புகையிலை தொடா்புடைய நோய்களால் 13 லட்சம் போ் உயிரிழப்பதாகவும், புற்றுநோயால் நிகழும் மரணத்தில் 23 சதவீதம் புகையிலை சாா்ந்தது எனவும் டாடா நினைவு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணா் பங்கஜ் சதுா்வேதி தெரிவித்துள்ளாா்.

Leave A Reply

Your email address will not be published.